உலகம்

1984-இல் விண்வெளிக்கு சென்ற 3,301 தேனீக்கள் : நாசா

நாசா விண்கலத்தில் 3,301 தேனீக்களை விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு விஞ்ஞானிகளால் சோதனை செய்யப்பட்டன.

அமெரிக்காவின் நாசா விண்கலத்தில் ஆயிரக்கணக்கான தேனீக்கள், புவிஈர்ப்பு விசையின் ஈர்ப்பு இல்லாமல் உயிர்வாழ முடியுமா என்பதையும், அவற்றால் தேன்கூட்டை கட்ட முடியுமா என்பதையும் சோதித்து பார்ப்பதற்காக விஞ்ஞானிகள் தேனீக்களை விண்வெளிக்கு கொண்டு சென்றனர்.

விண்வெளிக்கு சென்ற 3,301 தேனீக்கள்

அமெரிக்காவில் நாசாவின் டிஸ்கவரி விண்கலம் மூலம் கடந்த 1984-ஆம் ஆண்டு 3,301 தேனீக்கள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த தேனீக்கள் STS-41C என்ற திட்டத்தின் மூலம் ஏழு நாள் பயணமாக விஞ்ஞானிகள் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த தேனீக்கள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. அந்த தேனீக்கள் புவி ஈர்ப்பு விசை இல்லாமல் எவ்வாறு நடந்து கொள்கின்றன எனவும், அவை எவ்வாறு உயிர் வாழ்கின்றன என்பதை அறியவும் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும் விஞ்ஞானிகள், விண்வெளியில் கட்டப்பட்ட தேனடையை, பூமியில் உள்ள தேனீக்களால் உருவாக்கப்பட்ட தேனடையுடன் ஒப்பிடவும் விரும்பினர்.

இந்த தேனீக்கள் ஒரு ராணி தேனீ மற்றும் அதற்கு தேவையான உணவுகளுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மரச்சட்டங்களில் வைக்கப்பட்டன.

புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் சாதாரண திரவங்கள் மிதந்து கொண்டு இருக்கும் என்பதனால், தேனீக்களுக்கான உணவாக சர்க்கரை, நீர் மற்றும் அகர் அடங்கிய ஒரு கலவையை விஞ்ஞானிகள் உணவாக கொடுத்தனர்.

தேனீக்களால் விண்வெளியில் பறப்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ஆரம்பகட்ட ஆய்வுகளில், சில தேனீக்கள் பறக்க முயன்றபோது, தங்கள் மரச்சட்டங்களில் உள்ள சுவர்களில் மோதிக்கொண்டன.

இதைத்தொடர்ந்து ஏழாவது நாளில், தேனீக்கள் புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் தங்களை தகவமைத்து கொண்டது.

மேலும் இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், பல தேனீக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு பறந்து கொள்ள பழகிக்கொண்டதாகவும், மேலும் தேன்கூடு ஒன்றை வளர்க்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்தனர்.

விண்வெளியில் இருந்த அந்த தேனீக்கள் சுமார் 200 சென்டிமீட்டர் நீளத்தில் தேனடையை கட்டியதாகவும், ஆனால் அந்த தேனடை, பூமியில் கட்டப்பட்ட தேனடையை விட சிறிய விட்டங்களையும், தடிமனான சுவர்களை கொண்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

35 முட்டைகள்

பெரும்பாலான தேனீக்கள் விண்வெளி பயணத்தில் உயிர் பிழைத்திருந்ததாகவும், ராணி தேனீ சுமார் 35 முட்டைகளை இட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் பூமிக்கு திரும்பிய பிறகு அந்த முட்டைகளை ராணி தேனீயால் பொரிக்கமுடியவில்லை என்றும், இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் விண்வெளிக்கு சென்ற விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.