மனிதர்கள் சிலநேரம் தனிமையை விரும்புவார்கள் அல்லது தனிமை அவர்களுக்கு பரிசளிக்கப்படும். தானாக தனிமையை விரும்புவது என்பது வேறு. ஆனால் அது பரிசளிக்கம்படும்போது சொல்லொண்ணா துயரம் ஆட்கொள்ளும்.
அப்படி தனிமைப்படுத்தப்பட்டு, மனதை உருக்கும் தன்னுடைய கதையால் உலகம் முழுவதும் பிரபலமாகி, போதும் போதும் என்ற அளவிற்கும் அன்பை பெற்றதுதான் பஞ்ச் குரங்கு.
இந்நிலையில் நேற்று பஞ்ச் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியது. அதற்கு உலகம் முழுவதிலிருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்துள்ளன.
ஜப்பானுக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து சுமார் 2,500 பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை பஞ்ச் பெற்றுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் தலைவர் தகாஷி யசுனாகா கூறியுள்ளார்.
ஜப்பான் நாட்டின் சிபா மாகாணத்தில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சி சாலையில் 2025ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று பஞ்ச் பிறந்தது.
கோடைக்கால வெப்பம், முதல் குழந்தை, சோர்வு என பல காரணங்களால் பஞ்சின் தாய் அதனை கைவிட்டது. தாயன்பு கிடைக்காமல் ஏங்கிய பஞ்ச், கடுமையான தனிமையிலும் மன உளைச்சலிலும் வாடியது.
மேலும் அங்கிருந்த மற்றக் குரங்குகளும் பஞ்சை தங்களுடன் சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கின. இதனால் மிருகக்காட்சி சாலையின் ஊழியர்கள் ஆரஞ்சு நிற ஒராங்குட்டான் பஞ்சுப் பொம்மை ஒன்றை பஞ்சிற்கு கொடுத்துள்ளனர்.
எங்கு சென்றாலும் அந்தப் பெரிய பொம்மையைத் தன் சிறிய கைகளால் கட்டிப்பிடித்து பஞ்ச் இழுத்துச் சென்றது. உறங்கும் போதும், பயப்படும் போதும் அந்தப் பொம்மையின் நெஞ்சில் முகத்தைப் புதைத்து ஆறுதல் தேடிக்கொண்டது.
இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும், காட்சிகளுமே இணையத்தை உலுக்கின.
பின்னர் பூங்கா ஊழியர்களின் தொடர் பராமரிப்பால், பஞ்ச் படிப்படியாகப் பொம்மையைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக் கொண்டு, மற்ற குரங்குகளுடன் விளையாடவும், இருக்கவும் பழகிகொண்டது. இதனையும் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தெரியப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பஞ்ச் நேற்று தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியது. அதற்கு உலகம் முழுவதிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துள்ளன. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகள் பூங்காவிற்கு வந்துள்ளன. பூங்கா நிர்வாகம் இந்த வாழ்த்து அட்டைகளை ஒரு தனி அறையில் மக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தியுள்ளது.