உலகம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீது 250% வரி விதிக்கப்படும்: ஆபரேஷன் சிந்தூரில் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலர் உயிரிழந்ததை டிரம்ப் நினைவுகூர்ந்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே சமீபத்தில் நடக்க இருந்த போரை, தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நேற்று இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நடைபெற்றது. இந்த பிரசாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டு தேர்தல் பரப்புரை செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், 2025 ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை நினைவு கூர்ந்தார்.

ஆபரேஷன் சிந்தூர்

இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், “பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து,

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை ஆபரேஷன் சிந்தூர் குறிவைத்தது.

இரு நாடுகளுக்கும் இடையேயான சண்டை தொடர்ந்தால், கடுமையான வர்த்தக தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நான் எச்சரித்தேன்.

மேலும் சண்டையை நிறுத்தாவிட்டால், இரு நாடுகள் மீதும் 250 சதவீதம் வரி விதிப்பேன் என்று கூறினேன்.

அதனால் உங்களால் எந்த வர்த்தகமும் செய்ய முடியாது என்று நான் கூறினேன்,” என்று டிரம்ப் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், தனது தலையீட்டால் இரு நாடுகளும் கோபமடைந்ததாகவும், ஆனால் இறுதியில் துப்பாக்கி சூட்டை நிறுத்தி மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் டிரம்ப் கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பதினொரு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நான் இந்தப் போர்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தினேன், அவ்வாறு செய்வது உண்மையிலேயே ஒரு பெருமையான விஷயம்.

இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை எந்த பங்கையும் ஆற்றவில்லை. நான் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்ததில்லை.

ஆனால் நாங்கள் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினோம்,” என்று டிரம்ப் கூறினார்.

இந்தியா மறுப்பு

முன்னதாக ஆபரேஷன் சிந்தூரில், பாகிஸ்தான் நாட்டுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து இந்தியா கூறுகையில், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இன்றி, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நேரடியாக எட்டப்பட்டதாக தெரிவித்திருந்தது.

மேலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, தாம் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறிவரும் தகவலையும் இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

SCROLL FOR NEXT