உலகம்

கனடாவில் 25 வயது இந்திய இளைஞர் கொலை.. காருக்குள் எரிந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

துஷார் சர்மா மீது கனடாவில் எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லை

கனடாவில் எரிந்துபோன காரில் 25 வயது இந்திய இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லாங்லியீல் உள்ள ராலின்சன் கிரெசென்ட் பகுதியில் கடந்த அக்டோபர் 29, அன்று இரவு 10:30 மணியளவில் கார் ஒன்று தீப்பற்றி எரிவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது, காருக்குள் எரிந்த நிலையில் மனித உடல் இருப்பதைக் கண்டறிந்தனர்.

லாங்லி காவல்துறை சம்பவ இடத்தில் இருந்து தடையங்களை சேகரித்து விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு, காவல்துறை இந்த விசாரணையை கனடா ஒருங்கிணைந்த கொலை விசாரணை குழுவிடம் (IHIT) மாற்றியது.

இந்தியர்

இந்நிலையில் அந்த சடலம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் வசித்து வந்த 25 வயது இந்தியரான துஷார் சர்மா உடையது என IHIT உறுதிப்படுத்தியுள்ளது.

துஷார் ஷர்மாவின் பின்னணியையும், அவர் இறப்பதற்கு முன்பு அவருடன் தொடர்பில் இருந்த நபர்களையும் கண்டறிய அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

துஷார் சர்மா மீது கனடாவில் எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரங்களை அழிப்பதற்காக கார் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

வான்கூவரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT