உலகம்

15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் கொடு - சொந்த மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சீனத் தாய்!

குழந்தைகளை வளர்க்கும் முதல் பொறுப்பு பெற்றோருக்கே உரியது - ஷாங்காய் சட்ட வல்லுநர்களின் கருத்து.

குடும்ப உறவுகளுக்கும், கூட்டுக்குடும்பப் பாரம்பரியத்திற்கும் பெயர் போன ஆசியக் கலாச்சாரத்தில், ஒரு வயதான தாய் தனது பேத்தியை வளர்த்துக் கொடுத்ததற்காகத் தன் சொந்த மகனிடமே பராமரிப்புக் கட்டணம் கேட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறியுள்ள வினோத சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம், "தாத்தா-பாட்டிகள் பேரக் குழந்தைகளை வளர்ப்பது குடும்பக் கடமையா? அல்லது அதற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டுமா?" என்ற தேசிய அளவிலான விவாதத்தை உலகளவில் தூண்டியுள்ளது.

15 ஆண்டுகால உழைப்பும் குடும்ப மோதலும்

கிழக்கு சீனாவைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க 'சு' (Xu) என்ற பெண்மணி, ஷாங்காய் நீதிமன்றத்தில் தனது மகன் 'லியாங்' என்பவருக்கு எதிராக இந்த அதிரடி வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் லியாங் தனது மனைவியை விவாகரத்து செய்தபோது, அவரது மகளுக்கு (சு-வின் பேத்திக்கு) வெறும் 4 வயது மட்டுமே ஆகியிருந்தது.

விவாகரத்திற்குப் பிறகு, தனது தாயுடன் வசித்து வந்த லியாங், குழந்தையை வளர்க்கும் முழுப் பொறுப்பையும் தாய் 'சு'-விடமே ஒப்படைத்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக அந்தப் பெண்மணி, தனது பேத்தியின் அன்றாட வாழ்க்கைச் செலவுகள், மருத்துவச் செலவுகள் மற்றும் கல்விச் செலவுகள் என அனைத்தையும் தனது சொந்தப் பணத்தில் இருந்தே கவனித்து வந்துள்ளார்.

தாயின் குமுறலும் மகனின் வாதமும்

பிரச்சனை எப்போது தீவிரமானது என்றால், மகன் லியாங் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, தனது புதிய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறித் தனியாக வாழத் தொடங்கினார். ஆனால், தனது மகளைத் தாயின் பராமரிப்பிலேயே விட்டுச் சென்றுவிட்டார்.

பொருளாதார நெருக்கடியாலும், முதுமையாலும் பாதிக்கப்பட்ட தாய் சு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "என் மகனுக்குக் குடும்பப் பொறுப்பு என்பது சிறிதும் இல்லை.

ஒரு தந்தையாகத் தன் கடமையைச் செய்ய அவன் தவறிவிட்டான். இனிமேல் என்னால் பண உதவி செய்து என் பேத்தியைப் பராமரிக்க முடியாது.

எனவே, நான் 15 ஆண்டுகள் வளர்த்ததற்கான கட்டணமாக 3,60,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 45 லட்சத்திற்கும் மேல்) எனக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த மகன் லியாங், தனக்கு அப்போது மாதம் ரூ.37,000 மட்டுமே வருமானம் இருந்ததாகவும், தன் சக்திக்கு உட்பட்டு மகளுக்குப் பண உதவி செய்ததாகவும் வாதிட்டுள்ளார்.

சீனாவில் தொடரும் 'தாத்தா-பாட்டி கட்டண' வழக்குகள்

சீனாவில் இது போன்ற வழக்குகள் தொடர்வது இது முதல் முறையல்ல. பெய்ஜிங் நீதிமன்றத்தில் நடந்த மற்றொரு வழக்கில், 1 வயது முதல் பேத்தியை வளர்த்த தாத்தா-பாட்டி, தங்களது மகன் மற்றும் மருமகளுக்கு எதிராக ரூ. 40 லட்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

மற்றொரு சம்பவத்தில், ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 59 வயது மூதாட்டி ஒருவர், தனது மகனின் குழந்தையை வெறும் 6 மாதங்கள் கவனித்துக் கொண்டதில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, 20 கிலோ உடல் எடையைக் குறைத்து தீவிர மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார் இது போன்ற பல வழக்குகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமூக மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்து

இந்த விவகாரம் குறித்துச் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். சீனாவில் கிராமப்புற தொழிலாளர்கள் வேலை தேடி நகரங்களுக்கு இடம்பெயர்வதாலும், நகரங்களில் கணவன்-மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதாலும், குழந்தைகளைப் பராமரிக்கும் சுமை முதியவர்கள் மீதே விழுகிறது.

ஒரு காலத்தில் பேரக் குழந்தைகளை வளர்ப்பது பாசத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அது ஒரு 'ஊதியமில்லா உழைப்பு' என்ற அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. ஓய்வூதியம் பெற்று நிம்மதியாக வாழ வேண்டிய வயதில் முதியவர்கள் இந்தச் சுமையைத் தாங்க வேண்டியுள்ளது.

இது குறித்துப் பேசிய ஷாங்காய் சட்ட வல்லுநர்கள், "இது குடும்ப உறவுகளை வியாபாரமாக்குவது அல்ல, மாறாகப் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துவதாகும்.

குழந்தைகளை வளர்க்கும் முதல் பொறுப்பு பெற்றோருக்கே உரியது. அவர்களால் முடியாத பட்சத்தில் மட்டுமே தாத்தா-பாட்டி உதவ வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

இணையவாசிகளோ, சீனா தனது நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க விரும்பினால், முதியவர்களைச் சார்ந்து இருக்காமல், குறைந்த கட்டணத்தில் தரமான அரசு குழந்தை காப்பகங்களை உருவாக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT