உலகம்

15 ஆண்டுகள், 38 கொலைகள்: மனித உடல்களை சமைத்து உண்ட உகாண்டா சீரியல் கில்லர் கைது!

இறைச்சியை உண்ணும் இந்த அதிபயங்கரமான செயல் உகாண்டா மக்களிடையே கடும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் கடந்த 15 ஆண்டுகளில் 38 பேரை கொடூரமாகக் கொலை செய்து, அவர்களின் உடலை சமைத்துச் சாப்பிட்ட கொடூர கில்லரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கொடூர சீரியல் கில்லர் ஒருவர் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உகாண்டா வரலாற்றிலேயே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரின் பெயர் முஜுரிசி மோசஸ் என்பதாகும். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான நீண்ட காலகட்டத்தில், மசாகா, இபண்டா மற்றும் காசோ ஆகிய பல்வேறு பகுதிகளில் இந்தக் கொலைக் குற்றங்களை நிகழ்த்தியுள்ளார். பெண்களை ஏமாற்றியும், ஆசை வார்த்தைகளைக் கூறி வரவழைத்தும் கொடூரமாகக் கொலை செய்து வந்துள்ளார்.

உடல்களைச் சமைத்து உண்ட அவலம்

இந்தக் கொலையாளி கொலை செய்தவர்களின் உடல்களை அங்கேயே விட்டுச் செல்லாமல், சமைத்துச் சாப்பிட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. மனித இறைச்சியை உண்ணும் இந்த அதிபயங்கரமான செயல் உகாண்டா மக்களிடையே கடும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காணாமல் போனோர் வழக்குகள் மற்றும் கொலைச் சம்பவங்களுக்கும் இந்த நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் புலனாய்வாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்தக் கைது நடவடிக்கை குறித்து உகாண்டாவின் ராணுவத் தளபதி முஹூசி கைனெருகாபா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தகவலைப் பகிர்ந்துள்ளார். உகாண்டா வரலாற்றிலேயே மிகவும் மோசமான சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது இல்லத்திலிருந்து முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நபர் மீது பகிரங்க விசாரணை நடத்தப்பட்டு, பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT