Trump Administration  
உலகம்

அமெரிக்காவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் சரிவு!

2 லட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய டிரம்ப் அரசு முடிவு செய்வதாக தகவல்.

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் குடியேற்றக் கொள்கைகளில் தீவிர மாற்றங்களையும், கடுமையான விசா கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகிறது.

இதன் நேரடி விளைவாக, அமெரிக்க கல்லூரிகளில் சேர விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர் சேர்க்கையில் கடும் வீழ்ச்சி

இதுதொடர்பாக காமன் ஆப் என்ற அமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-26 கல்வியாண்டில் அமெரிக்காவில் இளங்கலைப் படிப்புகளில் சேர விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

வரும் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான சர்வதேச மாணவர்களின் ஒட்டுமொத்த விண்ணப்பங்கள் (மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி) 10 சதவீதம் குறைந்துள்ளது. இது மிக விசித்திரமான மற்றும் மிகப்பெரிய சரிவாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிற்கு சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை அனுப்பும் நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த 2024-25 கல்வியாண்டில் மட்டும் சுமார் 3.63 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பல்வேறு படிப்புகளில் சேர்ந்திருந்தனர்.

ஆனால், தற்போதைய கடுமையான விசா விதிமுறைகள், எச்-1பி (H-1B) விசா கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கை ரீதியான நிச்சயமற்ற சூழல் காரணமாக இந்திய மாணவர்கள் அமெரிக்காவைத் தேர்ந்தெடுப்பதைக் குறைத்து வருவதாகக் கல்வி நிபுணர்கள் விளக்குகின்றனர்.

2 லட்சம் விசாக்கள் ரத்து

மறுபுறம், அமெரிக்கக் குடியேற்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் புதிய அதிரடி நடவடிக்கை ஒன்றை டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

வணிக விசா மற்றும் சுற்றுலா விசா மூலமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து, பின்னர் அங்கு தஞ்சம் கோரிய சுமார் 2 லட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் விசாக்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அதிபர் டிரம்பின் இந்த அடுத்தடுத்த கடுமையான நடவடிக்கைகள், உயர்கல்விக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.