உலகம்

வியட்நாம் சுற்றுலா படகு விபத்து: 8 தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் பலி

விபத்து குறித்து அறிந்ததும் கடலோர காவல்படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

வியட்நாமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலம் ஃபூ குவொக் தீவு. இந்தப் பகுதியில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், ஊழியர்கள் 4 பேர் ஆகியோரை ஏற்றிச்சென்ற சுற்றுலா படகு நடுக்கடலில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

தகவலறிந்து வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் உள்ளூர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

விபத்து குறித்து அறிந்ததும் உள்ளூர் மீட்புக்குழு அதிகாரிகளும், கடலோர காவல்படையினரும் அங்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

இந்நிலையில், வியட்நாம் படகு விபத்தில் சிக்கி 8 தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் பழனியைச் சேர்ந்த முருக பிரபு, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.

சிறந்த வணிக செயல்பாட்டுக்காக லாவா நிறுவனம் சிலரை சுற்றுலா அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக, வியட்நாம் இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் வலைத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியட்நாமின் ஃபூ குவொக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு துரதிர்ஷ்டவசமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விபத்துக்கான காரணம் மற்றும் பயணிகளின் நிலவரங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.

மேலும், படகு விபத்தில் சிக்கிய இந்தியர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும், விபத்து குறித்த சரியான தகவல்களையும் உடனுக்குடன் வழங்குவதற்காக ஹோ சி மின் நகரில் இந்தியத் தூதரகம் ஒரு அவசரக் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.