கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியின் கடற்கரைக்கு அப்பால், 300-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட குறைந்தது 139 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை ஜிபூட்டி அதிகாரிகளால் அடக்கம் செய்யப்பட்டவர்களை மட்டுமே குறிக்கிறது. மற்றவர்கள் சக புலம்பெயர்ந்தோராலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் உடல்களை உறுதிப்படுத்தும் வரை அவர்கள் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று ஜிபூட்டியில் உள்ள IOM-இன் தலைவர் அலெக்சாண்டர் கொய்சாக் தெரிவித்தார்.
"மிகவும் துயரமான விஷயம் என்னவென்றால், போர்க்கால சூழலை போலவே, பெயர்கள் ஏதுமின்றி அவர்கள் ஒரு பொது கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தாய், தந்தை என உறவுகள் உள்ளனர்; ஆனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது ஒருபோதும் தெரியாமலே போகலாம்," என்று கொய்சாக் கூறினார்.
அக்டோபர் 8-ஆம் தேதி மாலை அந்தப் புலம்பெயர்ந்தோர் படகில் ஏறியதாகவும், "முக்கியமாக அளவுக்கு அதிகமான ஆட்கள் ஏற்றப்பட்டிருந்ததால்", கரைக்கு மிக அருகிலேயே அது விரைவில் மூழ்கிவிட்டதாகவும் கொய்சாக் தெரிவித்தார்.
"உள்ளூர் அதிகாரிகள் தங்களால் இயன்றவரை சிறப்பாகச் செயல்பட்டனர். ஆனால், ஒரே நேரத்தில் கரைக்கு வந்து சேர்ந்த ஏராளமான உடல்களைக் கையாள முடியாமல் அவர்கள் திணறினர்," என்றும் குறிப்பிட்டார்.
உயிர் பிழைத்த புலம்பெயர்ந்தோரை அதிகாரிகள் ஒபோக் நகரில் உள்ள IOM மீட்பு மையத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், அங்கு கடல்நீரை அருந்தியதால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மருத்துவ உதவியும், உளவியல் ரீதியான ஆதரவும் அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியிலிருந்து (Horn of Africa) அரேபிய தீபகற்பத்திற்கு மேற்கொள்ளப்படும் பிரபலமான, அதே சமயம் ஆபத்தான இந்தப் பயணப் பாதையில் நிகழ்ந்த மிக மோசமான படகு விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்; இப்பாதையின் வழியாகப் பல புலம்பெயர்ந்தோர் வளம் மிக்க வளைகுடா நாடுகளில் வேலை தேடிச் செல்கின்றனர்.
இந்த விபத்தில் குறைந்தது 84 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். IOM அமைப்பின் தகவலின்படி, ஜிபூட்டியிலிருந்து ஏமனுக்குச் சென்று கொண்டிருந்த படகு ஒன்று வியாழன் இரவு அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 80-க்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்ததாகவும், அவர்கள் அனைவரும் எத்தியோப்பிய நாட்டவர்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.
ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐ.நா.வின் புலம்பெயர்வோர் அமைப்பு, அப்படகில் மொத்தம் 305 பேர் இருந்ததாகக் கூறியதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்தது.