அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஒரு 13 வயது சிறுமி ஒருவர், அவரது சகோதரருடன் இணைந்து நாட்டில் நிலவும் பசியை போக்குவதற்காக, ஒரு பிரத்யேக செயலியை உருவாக்கி, அதன்மூலம் உணவின்றி பசியால் வாடும் குடும்பங்களுக்கு 25,000 பீட்சாக்களை இலவசமாக வழங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள தெற்கு புளோரிடாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 13 வயதான ஆஷ்ரிதா காசா என்ற சிறுமியும், அவரின் சகோதரரான அனிஷும் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சேவை செய்து வந்தனர்.
அப்போது அவர்கள் ஒருநாள் பீட்சாவை இலவசமாக கொடுத்து கொண்டிருந்த போது, பல குடும்பங்கள் உணவுக்காக வரிசையில் நின்று உணவுகளை வாங்கி சென்றனர்.
அந்த வரிசையில் பெரியவர்கள் மட்டுமல்லாமல், சிறு குழந்தைகளும் உணவுக்காக வரிசையில் நிற்பதை அவர்கள் கவனித்தனர்.
இந்த சம்பவம் 13 வயதான ஆஷ்ரிதாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆஷ்ரிதா கூறுகையில், எங்கள் வயதில் உணவு தேவைப்படும் குழந்தைகள் இருப்பார்கள் என நாங்கள் நினைத்து கூட பார்த்தது இல்லை என்று கூறினார்.
இதையடுத்து உணவு தானம் செய்ய விரும்புவோருக்கும், அந்த உணவை பெற்று மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய அமைப்புக்கும் இடையே உள்ள இடைவெளியை, தொழில்நுட்ப உதவியால் இணைக்க முடியும் என அவர்கள் உணர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆஷ்ரிதாவும் அவரது சகோதரரும், நன்கொடையாளர்களிடம் இருந்து உணவை வாங்கி, ஆர்டரை பெற்றுக்கொண்டு, அதை விநியோகம் செய்வதற்கு ஒரு அமைப்பை தேடுவதற்கு பதிலாக, ’பீட்சா ஃபார் பர்பஸ்’ (Pizza for Purpose) என்ற செயலியை உருவாக்கினர்.
இந்த செயலி மூலம், உணவுகளை நன்கொடையாக வழங்க விரும்புகிறவர்கள், அருகில் உள்ள உணவகம் அல்லது ஏதாவது ஒரு மளிகை கடையை தேர்ந்தெடுத்து, அதே பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் வகையில் செயலியை வடிவமைத்தனர்.
இந்த செயலி குறித்து ஆஷ்ரிதா கூறுகையில், “உணவுகளை வாங்க வருபவர்களின் செயல்கள் எங்கள் மனதை நெகிழ வைக்கிறது. பீட்சா கிடைத்தவுடன் அவர்களின் முகங்கள் பிரகாசமாகி விடுகின்றன.
இது மிகவும் மனநிறைவளிக்கிறது. ஏனென்றால் நாங்கள் செய்யும் எல்லாவற்றையும் இது அர்த்தமுள்ளதாக்குகிறது” என்று அவர் கூறினார்.
ஆஷ்ரிதா மற்றும் அனிஷ் ஆகியோர் உருவாக்கிய செயலி குறித்து ‘தி பேன்ட்ரி ஆஃப் ப்ரௌவர்ட்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வாரன் லூபோ கூறுகையில், “ஒவ்வொரு மாதமும் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு சேவை செய்ய முடிகிறது.
புதிதாக தயாரிக்கப்பட்ட சூடான பீட்சாக்களைப் பெற்று, அவற்றை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்ப்பது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
ஒரு தாத்தா அல்லது பாட்டி அந்த உணவை தங்கள் பேரக் குழந்தைகளுக்காக வீட்டிற்கு கொண்டு சென்றாலும் சரி, அல்லது இரவு உணவிற்காக வீட்டிற்கு எடுத்து செல்லும் ஒரு மூத்த குடிமகனாக இருந்தாலும் சரி.
அவர்களின் முகத்தில் தோன்றும் அந்த புன்னகை மிகவும் மனநிறைவளிக்கிறது” என்று அவர் கூறினார்.
பீட்சா ஃபார் பர்பஸ் என்ற செயலி மூலம் இரண்டு ஆண்டுகளுக்குள், 25,000 பீட்சா உணவுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க (USDA) பொருளாதார ஆராய்ச்சி சேவையின் தரவுகளின்படி, அமெரிக்காவில் சுமார் 5 கோடி மக்கள் உணவின்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஃபீடிங் என்ற நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, ஆண்டுதோறும் சுமார் 1 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பசி மற்றும் உணவின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், அமெரிக்காவில் வறுமையில் பசியால் வாடும் குடும்பங்கள், புதிதாக உருவாக்கப்பட்ட செயலி மூலம் தங்களின் உணவு தேவை சந்திக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.