சீனாவில் வசித்து வரும் 13 வயது சிறுமி ஒருவர், எந்தவிதமான ப்ரோகிரமிங் அறிவும் இல்லாமல் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் இணைந்த ஒரு செயலியை உருவாக்கி, அதன்மூலம் ரூபாய் 2.5 லட்சம் வருவாயை ஈட்டி, அதன் மூலம் கிடைத்த தொகையை தனது பெற்றோர்களிடம் கொடுத்துள்ளார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூ ஷூஹான் என்ற மாணவி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவிகள், தங்களின் பெற்றோர்களை விட்டு பிரிந்து, அந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் பெற்றோர்களின் மேற்பார்வை இல்லாமல் பயிலும் மாணவிகள், கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
இதை கவனித்த அந்த இரண்டாம் வகுப்பு மாணவியான ஜூ, தனது யோசனையின் மூலம் ‘ஸாய் சாங்’ என்ற செயலியை ஏ.ஐ தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கினார்.
இந்த செயலியை மாணவிகள் தங்கள் நேரடி படிப்பை எந்தவித கவனச் சிதறலும் இல்லாமல் பயிலும் வகையில் ஜூ உருவாக்கினார்.
இந்த செயலி மூலம், பெற்றோர்கள் தங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, பின்னர் தங்களின் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதை கண்கணிப்பதற்காக ஜூ உருவாக்கினார்.
மேலும் குழந்தைகள் தங்களின் போன்களில் (கைப்பேசி) விளையாடுவதையோ அல்லது இருக்கையை விட்டு எழுவதையோ கேமரா கண்டறிந்தால், அந்த செயலி பெற்றோர்களுக்கு குரல் வழி மூலம் ஒரு நினைவூட்டலை வழங்குகிறது.
குழந்தைகளின் படிப்பு நேரம் முடிந்தவுடன், இந்த செயலி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் குறித்த ஒரு அறிக்கையை உருவாக்குகிறது.
இந்த செயலி குறித்து மாணவி ஜூ கூறுகையில், எனது பெற்றோர் அடிக்கடி வேலையாக இருந்ததால், படிக்கும்போது தான் தனியாக விடப்பட்டதாகவும், இதையடுத்து தனது சொந்த அனுபவத்திலிருந்து இந்த யோசனை உருவானதாகவும் கூறினார்.
கோடிங் திறன்கள் எதுவும் இல்லாதபோதிலும், தனது யோசனையை ஒரு பெரிய மொழி மாதிரிக்கு (language model) விவரித்ததன் மூலம் இந்த செயலியை உருவாக்கியதாக மாணவி ஜூ கூறினார்.
இந்த செயலியின் தேவை தொடர்ந்து அதிகரித்தால், இந்த தயாரிப்பை அதிக பயனர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹாங்சோவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஏ.ஐ. தயாரிப்பு சந்தைப்படுத்துதல் போட்டியில், மாணவி ஜூ உருவாக்கிய ‘ஸாய் சாங்’ செயலி காட்சிபடுத்தப்பட்டது.
இந்த போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களின் செயலிகள், தொழில்நுட்ப மதிப்பீட்டின் அடிப்படையில் இல்லாமல், அவர்களின் ஏ.ஐ தயாரிப்புகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாயின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது.
இந்த போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் ஜூ ஷூஹான் மாணவி, மூன்றாம் இடத்தை பிடித்து 70,000 ரூபாய் ரொக்கத்தை பரிசாக வென்றார்.
ஜூ விற்பனை செய்த ஏ.ஐ செயலியானது, 90 ஆர்டர்களை பெற்று, மொத்தமாக மூன்று நாட்களில் 2.5 லட்சம் ரூபாயை ஈட்டியது.