உலகம்

13 அடி 6 அங்குலம்.. உலகின் மிக நீளமான வால் என்ற சாதனை படைத்த 'ஜென்னி' குதிரை

மெக்கன்சி லோவ் 13 வயதாக இருக்கும்போது, அவரின் பிறந்தநாளில் ஜென்னி என்ற பெண் குதிரை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் ஜென்னி என்ற குதிரை ஒன்றின் வால் 412.62 சென்டிமீட்டர் நீளத்திற்கு வளர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த குதிரையானது, குதிரைகளிலேயே மிக நீளமான வாலை கொண்டது என்ற சாதனையை படைத்துள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங் வேலி என்ற இடத்தில் மெக்கன்சி லோவ் மற்றும் ரேச்சல் எஸ்டெஸ் ஆகியோர் குதிரையேற்ற பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றனர்.

மெக்கன்சி லோவ் 13 வயதாக இருக்கும்போது, அவரின் பிறந்தநாளில் ஜென்னி என்ற பெண் குதிரை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த குதிரையானது அமெரிக்கன் சேடில்பிரெட் என்ற இனத்தை சேர்ந்தது.

இதையடுத்து அந்த குதிரையை தனது அம்மா மெலனி உடன் சேர்ந்து, ரேச்சல் வளர்க்க ஆரம்பித்தார். இந்த குதிரை சாதனையை படைக்கும் முயற்சியில் வளர்க்கப்படாமல், சாதாரணமாக வளர்க்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது ஜென்னி குதிரையின் வால் 13 அடி 6 அங்குலம் (412.62 செ.மீ) என்ற நீளம் வரையில் வளர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு காரின் முழு நீளத்திற்கு ஒத்த சமமாக வளர்ந்துள்ளது.

இதன்மூலம் இந்த குதிரையானது, குதிரைகளிலேயே மிக நீளமான வாலை கொண்டது என்ற சாதனையை படைத்துள்ளது.

குதிரை உரிமையாளர்

ஜென்னி குதிரை குறித்து அதன் உரிமையாளர் கூறுகையில், “என் அம்மா மெலனியுடன் சேர்ந்து பல ஆண்டுகளாக குதிரையின் வாலை பராமரிப்பதில் நாங்கள் மிகுந்த முயற்சி எடுத்துள்ளோம்

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்த இந்த மைல்கல்லை நினைத்து நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.

இந்த குதிரை மிகவும் இனிமையான, கூர்மையான மற்றும் புத்திசாலித்தனமான குதிரையாக வளர்ந்துள்ளது. எனது வாழ்வில் எது நடந்தாலும், அல்லது நான் சோகமாக இருந்தாலும், நான் ஜென்னியுடன் நேரத்தை செலவிடுவேன்.

அவள் மிகவும் வேடிக்கையானவள்; மேலும் அவள் நாய்க்குட்டியை போல மனிதர்களை அதிகமாக விரும்புவாள்; அவள் வெளியில் விளையாடுவதையும், திண்படங்களை சாப்பிடுவதையும் மிகவும் விரும்புவாள்.

நான் அவளை வாங்கும் போது, அவளுடைய வால் தரையைத் தொட்டது; ஆனால் அந்த அளவிற்கு நீளமானதாக இல்லை. குதிரையின் வால் நீண்ட மற்றும் அலைபாயும் வால்களைக் கொண்டிருந்தாலும், அவை 'டெயில் செட்' எனப்படும் ஒன்றை பயன்படுத்தி மேம்படுத்தப்பட்டன.

இந்த இனக் குதிரைகளுக்குக் கண்காட்சிகளில் நீண்ட வால் இருப்பது எதிர்பார்க்கப்படுவதால், அதை நாங்கள் வளர விட முடிவு செய்தோம்.

காலப்போக்கில் அது வளர்ந்துகொண்டே இருந்ததால், அது எவ்வளவு நீளமாக வளரும் என்று பார்க்கவும், இறுதியில் உலக சாதனை படைக்கவும் நாங்கள் முடிவு செய்தோம்.

நிச்சயமாக, ஜென்னியின் வால் எவ்வளவு அற்புதமான ஓர் உறுப்பாக இருந்தாலும், அது பல சவால்களையும் தன்னுடன் கொண்டு வருகிறது. அதைச் சரியாகப் பராமரிக்க அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது.

அது ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்க, மாதத்திற்கு ஒரு முறை அல்லது தேவைப்படும் போதெல்லாம் அதைக் கழுவி உலர்த்துவோம். இதையடுத்து கழுவி உலர்த்திய பிறகு, அதைப் பாதுகாக்க ஒரு பின்னலைப் போடுவோம்.

பின்னலை அவிழ்த்து. ஷாம்பு போட்டு, கண்டிஷனர் தடவி, உலர்த்தி, சிக்கலை நீக்கி, மீண்டும் பின்னலிடும் இந்தச் செயல்முறைக்குச் சராசரியாக நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகும்.

மக்கள் ஜென்னியை முதன்முதலில் பார்க்கும்போது, அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் அதன் வாலைப் பார்க்கும்போது, அதன் நீளத்தைக் கண்டு பிரமித்துப்போகிறார்கள்.

பொதுவாக, அது இவ்வளவு நீளமாக இருப்பதை நம்ப முடியவில்லை என்றும், அதைப் பார்ப்பதே ஆச்சரியமாக இருக்கிறது என்றும் கூறுவார்கள்.

எங்கள் குதிரைக் கொட்டகையில், சிலர் ஜென்னியை 'மிக நீண்ட வால் கொண்ட குதிரை' என்று அழைக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT