பாகிஸ்தானில் வெடிப்பொருட்கள் நிரப்பிய வாகனத்துடன் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 11 அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில், 30 பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் உள்ளது தேரா இஸ்மாயில் கான். இந்த பகுதியில் போலீஸ் வாகன சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடி அருகே இன்று வாகனம் ஒன்று வந்தபோது, அதில் இருந்த நபர் தற்கொலைப்படையாக மாறி வாகனத்தில் இருந்து வெடிப்பொருட்களை வெடிக்கச் செய்துள்ளார்.
இதனால் அந்த வாகனம் வெடித்து சிதறியது. அருகில் இருந்த வாகனங்கள், மக்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் பொதுமக்ளக் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் சுங்கம் மற்றும் கலால் துறை அதிகாரிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பாகிஸ்தானி தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த குரூப் தனியாக செயல்பட்டாலும் 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்புடன் கூட்டு வைத்துள்ளது.
இதேபோன்று கோஹத் என்ற இடத்தில் உள்ள மசூதி மீது தாக்குத் நடத்தப்பட்டது. இந்த மசூதி ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர். 78 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 போலீஸ் அதிகாரிகளும் உயிரிழந்தனர். ஏனென்றால் மசூதியுடன் போலீஸ் அலுவலகமும் சேதம் அடைந்தது.