கோப்புப்படம் 
செய்திகள்

உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி

உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அக்டோபர் 16-ந் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஒரு பிரியாணி கடையில் 5 பைசா கொண்டு வந்தால் ½ பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதலில் வரும் 100 நபர்களுக்கு பார்சலில் இந்த பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மதியம் 12 மணிக்கு பிரியாணி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் காலை 10 மணியில் இருந்தே கடை முன்பு ஏராளமானோர் கூடினர்.

இது குறித்து கடையின் உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் தெரிவிக்கையில், தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் இந்த உலகத்தையே அழித்து விட வேண்டும் என்று மகாகவி பாரதி பாடினார். உணவின் தேவையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பழமையான பொருட்களின் பெருமையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தற்போது கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சி மூலம் நமது தமிழர்களின் பழங்கால தொன்மை தெரிய வந்துள்ளது. இது உலகம் முழுவதும் நிச்சயம் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதே போல்தான் செல்லாத நாணயத்தை கூட சேமித்து வைத்தால் பெருமையை தரும் என்பதை உணர்த்தும் வகையில் 5 பைசா நாணயத்தை கொண்டு வந்து கொடுத்தால் பிரியாணி தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டோம். ஆனால் ஏராளமானோர் செல்லாத 5 பைசா நாணயங்களை வைத்திருந்தது மிகவும் ஆச்சரியம் அளித்தது.

SCROLL FOR NEXT