ஹம்பர்க்:
உலக குத்துச்சண்டை போட்டியில் 2-வது சுற்றில் இந்திய வீரர்கள் அமித் பான்கல், கவுரவ் பிதுரி ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். விகாஸ் கிருஷ்ணன், சுமித் சங்வான் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
19-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 49 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்று பந்தயத்தில் இந்திய வீரர் அமித் பான்கல், 7-ம் நிலை வீரர் கார்லோஸ் குய்போவை (ஈகுவடார்) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் நேர்த்தியான குத்துகளை விட்ட அமித் பான்கல் 5-0 என்ற புள்ளி கணக்கில் கார்லோசை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
கால்இறுதியில் அமித் பான்கல், 2-ம் நிலை வீரரான ஹசன்பாய் டஸ்மடோவ்வை (உஸ்பெகிஸ்தான்) சந்திக்கிறார்.
56 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் கவுரவ் பிதுரி, உக்ரைன் வீரர் மைகோலா பட்சென்கோவுடன் மோதினார். இதில் கவுரவ் பிதுரி 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கால்இறுதியில் கவுரவ் பிதுரி, துனிசியா வீரர் பிலெல் ஹம்தியை எதிர்கொள்கிறார்.
75 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்றில், 2011-ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், 3-ம் நிலை வீரருமான இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் யாரும் எதிர்பாராத வகையில் இங்கிலாந்தின் பெஞ்சமின் விட்டாகெரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
91 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்றில், ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் சுமித் சங்வான், ஆஸ்திரேலிய வீரர் ஜாசன் வாட்லேவிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். விகாஸ் கிருஷ்ணன், சுமித் சங்வான் ஆகியோர் இந்த போட்டி தொடரில் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 2-வது சுற்றிலேயே இருவரும் வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு பெருத்த அதிர்ச்சியை அளித்துள்ளது.
69 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்று பந்தயத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரரான மனோஜ்குமார், 2013-ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வெனிசுலா வீரர் கேப்ரியலிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.