கும்பகோணம்:
கும்பகோணத்தில் உலகப் புகழ் பெற்ற மகாமக விழா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. இதையொட்டி கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்காக ரூ.27 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி நடந்தது. இந்த குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வறட்சி காரணமாக குளத்தில் தண்ணீர் வற்றிப்போய் பாலைவனம் போல் காட்சியளித்தது. இந்நிலையில் அவ்வப்போது கும்பகோணம் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குளத்தில் சிறிதளவு தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் பட்டீஸ்வரம், தேனாம்படுகை கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 2 நாட்களாக பொற்றாமரை குளத்தில் பள்ளம் பறித்து மகாமக விழாவின் போது பக்தர்கள் வீசி சென்ற காசுகளை சேகரித்து வருகின்றனர்.
இதுபற்றி தொழிலாளர்கள் கூறும்போது, “பொற்றாமரை குளத்தில், மகாமக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடினார்கள். அப்போது பக்தர்கள் காசுகளை குளத்தில் வீசி செல்வது வழக்கம். இந்த நிலையில் குளம் வற்றி உள்ளதால் காசுகளை சேகரித்து வருகிறோம். ஆங்காங்கே மண்ணை தோண்டி பார்த்து ரூ.100 முதல் 200 வரை எங்களுக்கு கிடைத்து வருகிறது” என்றனர்.