களக்காடு:
நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரியை சேர்ந்தவர் ஆறுமுகபெருமாள் மகன் செல்வகுமார் (29). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டு அருகே உள்ள கட்டிடத்தின் முன் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்த போது 3 மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதேபோல் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்திற்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் அங்கு வீட்டு முன் நின்று கொண்டிருந்த முன்னாள் நாங்குநேரி ஒன்றிய திமுக செயலாளர் காமராஜ் (58) என்பவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அந்த மர்ம நபர்கள் அருகில் உள்ள இளங்தோப்புக்குள் நுழைந்து, அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடியதுடன், அவரது மகன் செல்வகுமாரையும் கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த தொடர் சம்பவங்களால் நாங்குநேரி, ஏர்வாடி கோதைசேரி பகுதிகளில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 3 பேரையும் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல்களில் ஈடுபட்டது மஞ்சங்குளத்தை சேர்ந்த ராமர், சாமித்துரை, சுப்பையா ஆகியோர் என்பது தெரியவந்தது.
தாக்குதல்களை நடத்திய அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு தோட்டத்தில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்த தனிப்படை போலீசார் ராமர் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தனிப்படையினர் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கொலை மற்றும் தாக்குதலுக்கான காரணம் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட செல்வகுமார், வீடு சூறையாடப்பட்ட கனகராஜ் மகன் செல்வகுமார், மற்றும் கொலையில் ஈடுபட்ட ராமர், சுப்பையா, சாமித்துரை ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒன்றாக கட்டிட தொழிலுக்கு சென்று வந்துள்ளனர். டோனாவூர் அருகே உள்ள கீழமலையநேரியில் ஒரு வீடு கட்டுமானத்தின் போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறை திமுக பிரமுகர் காமராஜ் தலையிட்டு சமரசம் செய்து வைத்துள்ளார். இந்த முன்விரோதம் காரணமாகவே செல்வகுமார் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இதன் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கைதான 3 பேரையும் இன்று பிற்பகல் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.