தற்கொலை 
செய்திகள்

பாளையில் இன்று தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

பாளையில் குடும்பம் நடத்த மனைவி வராததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

நெல்லை:

பாளை மனகாவலன் பிள்ளை நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சப்பாணி (வயது39). கூலி தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்து விட்டதால், முத்துமாரி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் 2-வது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்தார். இதனால் அவரது மனைவி முத்துமாரி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். குடும்பம் நடத்த அழைத்தும் அவர் வரமறுத்து விட்டாராம். இதனால் மனம் உடைந்த சப்பாணி நேற்று நள்ளிரவு தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை அவரது வீட்டு கதவு நீண்ட நேரம் திறக்காததால், அவரது உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது சப்பாணி தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் பாளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறில் சப்பாணி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் மானூர் அருகே உள்ள மேலப்பிள்ளையார் குளத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (60), விவசாய கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி மது குடித்ததால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மகன் சுப்புரத்தினம் சத்தம் போட்டுள்ளார்.

இதில் மனம் உடைந்த பாலகிருஷ்ணன் நேற்று வி‌ஷம் குடித்தார். அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித் தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.