விசாரணை 
செய்திகள்

குழந்தை திருமணம் செய்த தொழிலாளிக்கு வலைவீச்சு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் குழந்தை திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாலை மலர்

வேலூர்:

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பெரிய ஏரியூரை சேர்ந்தவர் மோகன் (வயது 26), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் கர்ப்பமான சிறுமி கடந்த 8-ந் தேதி பிரசவத்திற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்பாக திருமணம் நடைபெற்று கர்ப்பமானதை அறிந்த டாக்டர்கள் இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். மேலும் குழந்தை திருமணம் நடைபெற்றது குறித்து சிறுமியிடம் புகார் எழுதி வாங்கினர். பின்னர் மோகன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த மோகன் தலைமறைவானார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் 16 வயது சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.