திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள தத்துவநேரியை சேர்ந்தவர் பாண்டி (வயது45). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தில்லை ராஜா. இவர்கள் இருவரும் நேற்று மாலை அங்குள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றனர். தில்லைராஜா குளத்தின் கரையில் நின்றார். பாண்டி குளத்தில் இறங்கி மீன்பிடிப்பதற்காக வலையை விரித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் தண்ணீரில் மூழ்கினார். உடனே இதுபற்றி தில்லைராஜா அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தார். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
திசையன்விளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் மூழ்கிய பாண்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வெகுநேரம் ஆனதால் பாண்டி கிடைக்கவில்லை. அவர் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து இன்று காலையும் பாண்டியின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து உவரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews