ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கோவில்புரத்தை சேர்ந்தவர் வைகுண்டராஜன் (வயது48). கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்தார்.
ஸ்ரீகிருஷ்ணாபுரம் பகுதியில் அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே அழிக்கால் பகுதியை சேர்ந்த ஜெரால்டு (45) என்பவர் ஆட்டோவை ஓட்டிவந்தார். திடீரென ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தூக்கி வீசப்பட்ட வைகுண்டராஜன் பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து வைகுண்ட ராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ராஜாக்க மங்கலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான வைகுண்டராஜனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஸ்ரீபிரியா, அர்ச்சனா, அபிஷா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.