புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கம் குப்பம்பேட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 41). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு புனிதா (37) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
குணசேகரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. வேலைக்கு சென்றுவிட்டு அடிக்கடி குடித்து விட்டு வருவார். அதேபோல் நேற்று இரவும் குணசேகரன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வழக்கம் போல் அவரது மனைவி சாப்பாடு பரிமாறினார். சாப்பாட்டுடன் 2 அவித்த முட்டை வைத்திருந்தார்.
குணசேகரன் ஒரு முட்டையை எடுத்து முழுசாக அப்படியே சாப்பிட்டார். அந்த முட்டை தொண்டையில் சிக்கி விக்கல் எடுத்தது. உடனே புனிதா தண்ணீர் கொடுத்தார்.
ஆனால் முட்டை தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குணசேகரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து முதலியார் பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.