செய்திகள்

மேட்டூரில் நிலக்கரி இறக்கும் போது ரெயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கி தொழிலாளி பலி

மேட்டூரில் நிலக்கரி இருக்கும் போது ரெயில் பெட்டுகளுக்கு இடையில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது39). இவர் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அங்கு ரெயிலில் இருந்து நிலக்கரியை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் இருந்த ரெயில் பெட்டி எதிர்பாராத விதமாக முன்னோக்கி நகர்ந்து வந்தது. இதை பார்த்த மற்ற தொழிலாளர்கள் ரெயில் பெட்டி வருகிறது என்று மூர்த்தியை எச்சரித்தனர். ஆனால் ரெயில் பெட்டி நகர்ந்து வருவதை கவனிக்காத அவர் 2 பெட்டிகளுக்கு நடுவில் வசமாக சிக்கிக்கொண்டார். இதில் அவர் உடல் நசுங்கி, தலை துண்டாகி பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அருகில் வேலை செய்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து கருமலைகூடல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மூர்த்திக்கு தேவி என்ற மனைவியும், 1 மகனும் மகளும் உள்ளனர்.