தற்கொலை 
செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை

ஆரல்வாய்மொழி அருகே குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

நாகர்கோவில்

திருப்பதிசாரம் வடக்கு நாஞ்சில்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 39) தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துவந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்தார். சம்பவத்தன்று முருகன் தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதில் மனவேதனையுடன் முருகன் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார்.

இதனைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அஞ்சுகிராமம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் அஜிஸ்குமார் (45). இவருக்கு திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் மனவேதனையுடன் காணப்பட்டு வந்த அஜிஸ்குமார் சம்பவத்தன்று வீட்டின் படுக்கை அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிமேனகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.