மத்திய மந்திரி ரமே‌‌ஷ் பொக்ரியால் 
செய்திகள்

பல்கலைக்கழகங்களை அரசியல் மேடை ஆக்காதீர்கள் - மத்திய மந்திரி ரமே‌‌ஷ் பொக்ரியால் பேட்டி

நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் இடங்களான பல்கலைக்கழகங்களை அரசியல் மேடை ஆக்காதீர்கள் என்று மத்திய மந்திரி ரமே‌‌ஷ் பொக்ரியால் கூறினார்.

மாலை மலர்

டேராடூன்:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முகமூடி அணிந்த ஒரு கும்பல் மாணவர்கள், ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியது. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த பலர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மத்திய அரசும், பா.ஜனதா கட்சியும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்‌ஷா டெல்லி கவர்னர் அனில் பைஜால், டெல்லி போலீஸ் கமி‌‌ஷனர் அமுல்யா பட்நாயக் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் ஹால்ட்வானியில் மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ரமே‌‌ஷ் பொக்ரியால் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகிறதே? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் இடங்களான பல்கலைக்கழகங்கள் கல்வி பயிலும் மையங்கள். நாம் அவைகளை அரசியலுக்கான மேடைகளாக்க அனுமதிக்கக் கூடாது.

குறிப்பிட்ட 3 நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக சட்டம் கொண்டுவருவதில் என்ன தவறு உள்ளது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்டபோது அங்கு சிறுபான்மையினர் 22 சதவீதமாக இருந்தனர். இப்போது அது 3.7 சதவீதமாக சுருங்கிவிட்டது.

அங்கு தங்கள் மதம் காரணமாக துன்புறுத்தப்பட்டதால் இந்தியாவை சரணாலயமாக கருதி வந்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே. இந்த சட்டம் மனிதாபிமானம் அடிப்படையிலானது.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் நிலையில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது. காங்கிரஸ் கட்சி ஏன் அதுபோன்ற ஒரு சாயலை ஏற்படுத்தி கூக்குரல் எழுப்புகிறது என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு மத்திய மந்திரி பிரகா‌‌ஷ் ஜவடேகர் டுவிட்டர் மூலம் கண்டனம் தெரிவித்தார். மேலும் மத்திய மந்திரி பியூ‌‌ஷ் கோயல் கூறும்போது, ‘‘இது மிகவும் துரதிர்‌‌ஷ்டவசமான சம்பவம். நாம் அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய நேரம் இது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் உண்மைகள் வெளியானதும் உரிய, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.