செய்திகள்

திருவள்ளூரில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்துக்குள் காலி குடத்துடன் பெண்கள் போராட்டம்

திருவள்ளூரில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

திருவள்ளூர்:

திருவள்ளூர் பத்தியால் பேட்டையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு அதே பகுதியில் உள்ள ஒரு மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த 3 நாட்களாக தண்ணீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் காலி குடங்களுடன் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.

அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென பெண்கள் சிலர் காலி குடத்துடன் நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து கோ‌ஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் நகராட்சி கமி‌ஷனர் செந்தில்குமரன் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #Tamilnews