செய்திகள்

உடன்குடி அருகே டாஸ்மாக்கடையை அகற்ற கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

உடன்குடி அருகே டாஸ்மாக்கடையை மூடக்கோரி பெண்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடன்குடி:

உடன்குடி-குலசேகரன்பட்டினம் சாலையில் தருவைக்குளம் பகுதியில் புதிதாக டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக்கடையின் பின்புறம் சமத்துவபுரம் அமைந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக்கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் டாஸ்மாக்கடை அகற்றப்படாததால் கடந்த 14-ந்தேதி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக்கடையை அகற்ற கோரி அப்பகுதி பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக்கடையை அகற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலையில் சமத்துவபுரம் பெண்கள் திரண்டு வந்து டாஸ்மாக்கடையை முற்றுகையிட்டு கடையை மூடக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு, வட்டாட்சியர் அழகர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மூன்று நாட்களுக்குள் கடை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT