லைசென்ஸ் வாங்க ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு பெண்கள் குவிந்து வருகிறார்கள் (இடம்: அண்ணாநகர் அலுவலகம்) 
செய்திகள்

மானிய விலையில் ஸ்கூட்டி: லைசென்ஸ் எடுக்க பெண்கள் ஆர்வம்- ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் குவிந்தனர்

பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டி வாங்க ஆர்வமுடன் லைசென்ஸ் எடுத்து வருகிறார்கள். இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் காலை 8 மணிக்கே பெண்கள் கூட்டம் காணப்படுகிறது.

சென்னை:

தமிழக அரசு பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்க முடிவு செய்திருக்கிறது. இந்த ஸ்கூட்டிகளை வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) வைத்திருக்க வேண்டும், ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் கூறப்பட்டுள்ளன.

இதையடுத்து லைசென்ஸ் இல்லாத பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டி வாங்க ஆர்வமுடன் லைசென்ஸ் எடுத்து வருகிறார்கள்.

இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் காலை 8 மணிக்கே பெண்கள் கூட்டம் காணப்படுகிறது. வரிசையில் நின்று அவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகிறார்கள். அதிகாரிகள் விண்ணப்பங்களை சரிபார்த்து எல்.எல்.ஆர். வழங்குகிறார்கள்.

இதுபற்றி லதா என்ற பெண் கூறியதாவது:-

நான் கிழக்கு முகப்பேரில் வசித்து வருகிறேன். வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். தினமும் வேலைக்கு பஸ்சில் சென்று வருகிறேன்.

தற்போது பஸ் கட்டணம் உயர்த்தி விட்டதால் மொபட்டில் செல்வது வசதியாக இருக்கும். சரியான நேரத்துக்கும் வேலைக்கு செல்ல முடியும். அரசு வழங்கும் மானிய விலை ஸ்கூட்டி வாங்க முடிவு செய்து அதற்கான லைசென்ஸ் பெற விண்ணப்பித்துள்ளேன்.

அரசு வழங்கும் ஸ்கூட்டி என்னை போல் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார். #Tamilnews