கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார்நகர், சிவனேசன் நகர், மேட்டுத்தெரு மற்றும் ஐ.ஆர்.டி. சாலை பகுதியில் வசிக்கும் சுமார் 134 பயனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அவர்களுக்கு முறையாக வேலை வழங்கப்படவில்லை என்றும், வேலை செய்பவர்கள் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஏற்கனவே வேலை செய்ததற்கான சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியைச்சேர்ந்த 200 பெண்கள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, தொடர்ந்து முறையாக வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதே போல ஓபசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட குழிநாவல் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கிட கோரி கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபுவிடம் மனு அளித்தனர்.