புதுவை கவர்னராக கிரண்பேடி பதவி ஏற்றது முதல் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
அதுபோல் கடந்த சனிக்கிழமை ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் பகுதியில் கவர்னர் ஆய்வு செய்ய சென்ற போது, நலத்திட்ட உதவிகளை வழங்க முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறி கவர்னரை முற்றுகையிட பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.
இதனை அறிந்த கவர்னர் கிரண்பேடி பாதியிலேயே ஆய்வு பணியை முடித்து கொண்டு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.
இந்த நிலையில் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தையொட்டி ஊரக வளர்ச்சி துறையின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் பாகூர் தொகுதிக்குட்பட்ட சோரியாங்குப்பத்தில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
இந்த நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும் கவர்னர் கிரண்பேடி ஆர்வத்துடன் பெண்களுடன் சேர்ந்து கயிறு இழுக்கும் போட்டி, ரிங் பால் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றார்.
இதனைத்தொடர்ந்து அங்குள்ள கோவில் வளாகத்தில் நடந்த கூட்டத்தில் பெண்கள் மத்தியில் கவர்னர் பேசினார். அப்போது தனியாரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி கஷ்டப்பட வேண்டாம் என்றும், சுய உதவிக்குழுக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் மூலம் வங்கிகள் கடன் கொடுப்பதால் அதனை பெற்று தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்றும் கழிவறை வசதி ஏற்படுத்தி கொள்ள அரசு ரூ.20 ஆயிரம் வழங்குவதால் அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கவர்னர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அங்கிருந்து கவர்னர் புறப்பட முயன்றார். அப்போது அப்பகுதி பெண்கள் கவர்னரை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பினர். ஏழைகளுக்கு வழங்கும் நலத்திட்ட உதவிகளை தடுப்பது ஏன்? இலவச அரிசி வழங்கப்படவில்லை.
தீபாவளி பண்டிகைக்காக இலவச சர்க்கரை வழங்கவில்லை. கழிவறை கட்டினால் மட்டும் போதுமா? உயிர் வாழவே உணவு இல்லாமல் கழிவறை கட்டி என்ன பயன்? அரசு வழங்கும் ரூ.20 ஆயிரத்தில் கழிவறை கட்ட முடியுமா? கட்டுமான பொருட்கள் விலை ஏறி விட்டது.
இந்த பகுதியில் பல மதுக்கடைகள் அமைந்துள்ளதால் இளைஞர் சமுதாயம் சீரழிகிறது. மதுவுக்கு ஒரு மாதத்தில் 10 பேர் இறக்கின்றனர்.