ஆனந்த் - சரோஜா தம்பதி 
செய்திகள்

அரசியல் களத்தில் ரஜினியால் மாற்றம் ஏற்படும்: பெண்கள் கருத்து

தமிழக அரசியல் களத்தில் ரஜினியால் மாற்றம் ஏற்படும் என பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Rajinikanth #Rajinikanthpoliticalentry

மாலை மலர்

சென்னை:

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபம் இன்று திருவிழா போல காட்சி அளித்தது. மண்டபத்தின் வெளியே காத்திருந்த ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி கோ‌ஷமிட்டுக் கொண்டே இருந்தனர்.

தேனாம்பேட்டையை சேர்ந்த கணவன்- மனைவியான ஆனந்த்-சரோஜா இருவரும் தங்களது குழந்தை கிருத்திக்குடன் காலை 6 மணியில் இருந்தே ரஜினியை பார்க்க காத்திருந்தனர்.

இவர்களை போல ஏராளமான ரசிகர்களும், சிறுவர்களும் மண்டபத்திற்கு வெளியில் ரஜினியின் தரிசனத்திற்காக தவம் இருந்தனர்.

ஏராளமான பெண்களும் ரஜினியை பார்க்க திரண்டு வந்தனர். தமிழக அரசியல் களத்தில் ரஜினியால் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சரோஜா:- ரஜினியை இதுவரை நேரில் பார்த்தது இல்லை. இப்போதுதான் முதல் முறையாக தூரத்தில் இருந்து பார்த்தேன். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்து அதனை வீட்டில் பெரிதாக மாட்டி வைக்க வேண்டும். இன்று தமிழகத்தில் சரியான தலைவர்கள் இல்லை. தமிழக மக்களை காப்பதற்கே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். நிச்சயம் அரசியல் களத்தில் அவர் வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்துவார்.

ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் நான் சொன்னதை செய்து முடிக்காவிட்டால் ராஜினாமா செய்வேன் என்றும் ரஜினி கூறி உள்ளார். ஆன்மீகவாதியான அவர் நிச்சயம் நேர்மையான அரசாங்கத்தை தருவார்.

ஆனந்த்:- ரஜினிகாந்த்துக்கு பதவி, பணம் மீது ஆசை இல்லை. அப்படி இருந்திருந்தால் 45 வயதிலேயே அவர் அரசியலுக்கு வந்திருப்பார். ரஜினி மீது வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்கிற முத்திரை குத்தப்படுகிறது. அவரை அப்படி பிரித்து பார்க்க கூடாது. இந்திய குடிமகனாகவே பார்க்க வேண்டும். அ.தி.மு.க.-தி.மு.க. ஆகிய கட்சிகளை வீழ்த்தி நிச்சயம் ரஜினி வெற்றி பெறுவார்.

விஜயலட்சுமி - ஜுவாலா

விஜயலட்சுமி:- ரஜினியின் ராகவேந்திரா மண்டபம் எதிரில் குடியிருக்கும் நாங்கள் எங்களது பக்கத்து வீட்டுகாரரை போலவே ரஜினியை கருதுகிறோம். திருப்பதி மலை அடிவாரத்தில் இருப்பவர்கள் தினமும் பெருமாளை தரிசிக்க நினைப்பதில்லை.

அதே போல ராகவேந்திரா மண்டபத்திற்கு அடிக்கடி வரும் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூட எங்களுக்கு தோன்றியது இல்லை. நல்ல மனிதரான அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். சத்தியமும், நேர்மையும் அரசியலில் நிச்சயம் ஜெயிக்கும்.

ஜூவாலா:- 11-வது படித்து வரும் நான் இது வரை ஓட்டு போட்டது இல்லை. வருகிற தேர்தலில் ரஜினி அங்கிளுக்கே எனது முதல் ஓட்டு. எங்களை போல பெரும்பாலான அனைவருமே அவரை ஆதரிப்பார்கள். கல்வியில் இப்போது உள்ள சிஸ்டத்தை ரஜினி அங்கிளால்தான் மாற்றமுடியும்.

வசந்தி:- தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். காமராஜருக்கு பிறகு நேர்மையான அரசியல்வாதிகள் யாரும் உருவாகவில்லை. தமிழக மக்கள் படும் கஷ்டத்தை பார்த்துதான் ரஜினி அரசியலுக்கு வருகிறார். நிச்சயம் நேர்மையான ஆட்சியை அவர் அளிப்பார். ரஜினி கூறியது போல, காவலர்களாக எங்களை பதிவு செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Rajinikanth #Rajinikanthpoliticalentry #tamilnews