கொலை செய்யப்பட்ட பெண், தற்கொலை செய்து கொண்ட போலீஸ் 
செய்திகள்

மனைவி குத்தி கொலை - தற்கொலை செய்த போலீஸ்காரர் பற்றி புதிய தகவல்

புழல் அருகே மனைவியை குத்தி கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரரை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

செங்குன்றம்:

புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் நரேஷ். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு தருண் (வயது 7) என்ற மகன் உள்ளான்.

நரேசும் ஜெயஸ்ரீயும் பெரம்பூர் செம்பியத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். மகன் தருணை புழல் புத்தகரத்தில் உள்ள ஜெயஸ்ரீயின் தாய் ஜமுனா வீட்டில் தங்க வைத்து அங்குள்ள பள்ளியில் சேர்த்து இருந்தனர். மகனை பார்க்க அடிக்கடி புத்தகரத்துக்கு சென்று வந்தனர்.

நரேசுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அதை ஜெயஸ்ரீ கண்டித்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவர்களை உறவினர்கள் சமாதானப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஜெயஸ்ரீ கோபித்துக் கொண்டு புத்தகரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் ஜெயஸ்ரீ தனது தாய் ஜமுனா, மகன் தருண் ஆகியோருடன் வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள தாய்மாமன் சரவணன் வீட்டுக்கு சென்றார்.

மனைவி, மகனுடன் சர்மா நகரில் உள்ள சரவணன் வீட்டுக்கு சென்று இருப்பதை அறிந்த நரேஷ் அங்கு சென்றார்.

மனைவியிடம் இனிமேல் தகராறு செய்ய மாட்டேன் என்று சமாதானம் செய்தார். இதனால் ஜெயஸ்ரீ சமாதானம் அடைந்தார்.

பின்னர் ஜெயஸ்ரீ, தருண் ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு புத்தகரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.

அப்போது இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நரேஷ் கத்தியால் ஜெயஸ்ரீயை சரமாரியாக குத்தினார். கழுத்து, முதுகு, தாடை உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து விழுந்த ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் நரேஷ் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே உறவினர் சரவணன் ஜெயஸ்ரீ, நரேஷ் ஆகியோரின் செல்போனை தொடர்பு கொண்டார். ஆனால் அவர்கள் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து புத்தகரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சரவணன் பார்த்தார். அங்கு ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்திலும், நரேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு சிறுவன் தருண் தூங்கிக் கொண்டு இருந்தான்.

இது குறித்து தகவல் அறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நரேசின் குடிப்பழக்கத்தை ஜெயஸ்ரீ அடிக்கடி கண்டித்து வந்ததால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் இருவரும் ஒருவர் மீது ஒருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு சண்டை போட்டு வந்தனர்.

நேற்று இரவு மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்த நரேஷ் மது குடிக்க முயன்றுள்ளார். இதனை ஜெயஸ்ரீ கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த நரேஷ் கத்தியால் அவரை குத்தி கொன்று தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.