செய்திகள்

கேரளாவில் கற்பழிப்பு: பாதிரியார்களை கைது செய்ய ஆதாரங்களை திரட்டும் போலீஸ்

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண் கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக பாதிரியார்களை கைது செய்ய போலீசார் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்பு பாதிரியார் ஒரு வரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திருமணமும் நடைபெற்றது. தன்னை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்ததை பாவமன்னிப்பு அறிக்கை செய்ய அந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்று பாதிரியாரிடம் நடந் தவைகளை கூறி பாவமன்னிப்பு கேட்டார்.

ஆனால் அதை வைத்தே அந்த பெண்ணை மிரட்டி அந்த ஆலயத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் ஜோசப் மேத்யூ, ஆபிரகாம் வர்க்கீஸ், ஜாண்சன் வி.மேத்யூ, ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகிய 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இது பற்றி அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததும் அவர் அது பற்றி வாட்ஸ்-அப்பில் தகவல் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அந்த 4 பாதிரியார்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். தங்கள் மீதான புகாரை மறுத்த பாதிரியார்கள் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

முதலில் ஜோசப் மேத்யூ, ஆபிரகாம் வர்க்கீஸ் ஆகியோரும் அதைத் தொடர்ந்து ஜாண்சன் வி.மேத்யூ, ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோரும் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை கோர்ட்டு வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதற்கிடையில் பாதிரியார்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது பற்றி பாதிக்கப்பட்ட பெண் திருவல்லா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலமும் அளித்தார். இதனால் இந்த விவகாரம் சூடு பிடித்தது.

அடுத்த கட்டமாக பாதிரியார்கள் 4 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கூறியதாவது:-

இளம்பெண்ணை 4 பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். ஆதாரங்கள் கிடைத்த பிறகு தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக போலீசார் கைது நடவடிக்கையை தாமதபடுத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது. இந்த சம்பவம் நடந்து 9 வருடங்கள் ஆகிவிட்டதால் ஆதாரங்களை சேகரிக்க போலீசாருக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார். #tamilnews