மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேலை பார்க்கும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டம் தமிழக அரசால் தற்போது செயல்படுத்தப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் சுயமாக தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்கு கடந்த 22-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் பெண்களுக்கு முதல் கட்டமாக ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது முதல்மானிய விலை ஸ்கூட்டர் வாங்குவதற்கு பெண்களிடையே ஆர்வம் அதிகரித்தது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வாங்க திரண்டனர். இதற்கு விண்ணப்பிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் அதற்கான ஆவணங்களை வாங்குவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது.
பணிபுரியும் நிறுவனத்தின் கடிதம், டிரைவிங் லைசென்ஸ் அல்லது பழகுனர் ஓட்டுனர் உரிமம் (எல்.எல்.ஆர்), வருவாய் சான்றிதழ், கல்வி சான்றிதழ் போன்றவை இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க பெண்கள் அதிக அளவில் குவிந்தனர். காலை 6 மணிக்கே மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வரிசையில் காத்து நின்றனர். நேரம் செல்லச் செல்ல வரிசை நீண்டு கொண்டே சென்றது.
மானிய விலையில் ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க பெண்கள் காத்து நின்றனர். ஒருசிலர் தங்கள் கணவரை அழைத்து வந்திருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமைவரை சென்னையில் 17 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டிருந்தன. அதில் 6900 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
கூட்டம் அதிகமாக இருக்கும் மண்டலங்களில் கூடுதலாக கவுண்டர்கள் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்க பெண்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
அவர்களில் சிலர் தங்கள் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
ரேகா (கீழ்ப்பாக்கம் கார்டன்):- நான் சொந்தமாக ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறேன். கடைக்கு தினமும் பஸ்சில் சென்று வருகிறேன். இந்த திட்டம் மூலம் மானிய விலையில் ஸ்கூட்டர் கிடைத்தால் எனக்கு உதவியாக இருக்கும். கடைக்கு செல்வதற்கு மட்டுமின்றி என் குழந்தைகளை பள்ளிக்கு சென்று விடுவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகளை ஆட்டோவில் அனுப்புவது பாதுகாப்பாக இல்லை. ஸ்கூட்டர் இருந்தால் நானே கொண்டு போய் விட்டு விடுவேன்.
இந்த திட்டம் தகுதியானவர்களுக்கு கிடைத்தால் நல்லது. இதை வரவேற்கிறோம்.
ஜென்சி வினோவின் (அயனாவரம்):- நான் டெய்லரிங் படித்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். வருவாய் சான்றிதழ் வாங்குவதற்கு 1 வாரமாக அலைந்தேன். விண்ணப்பிக்க மிக குறுகிய காலமே கொடுத்ததால் பலரால் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியவில்லை. மேலும் 1 வாரம் கால அவகாசம் கொடுத்தால் பெண்களுக்கு உதவியாக இருக்கும். இன்று கடைசி நாள் என்பதால் நாங்கள் வெள்ளிக்கிழமை வந்தோம் அன்று விண்ணப்பிக்க முடியவில்லை. மறுநாள் வந்தால் அன்று அலுவலகம் திறக்கவில்லை. அதனால் இன்று காலை 8 மணிக்கே வரிசையில் வந்து நின்று விட்டேன். எப்படியாவது விண்ணப்பித்து விட்டுத்தான் செல்வேன். வேலை செய்யும் நிறுவனங்களில் சான்றிதழ் வாங்குவது கஷ்டமாக உள்ளது. ஒரு சிலர் கொடுக்கிறார்கள். சில நிறுவனங்களில் தர மறுக்கிறார்கள். இது போன்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு விண்ணப்பத்தை ஆய்வு செய்து முறையான வர்களுக்கு ஸ்கூட்டர் வழங்க வேண்டும்.
மோனிஷா (அமைந்தகரை):- நான் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருகிறேன். விண்ணப்பிக்க நான் 3 நாட்களாக அலைகிறேன். இன்று கடைசி நாள் என்பதால் காலையிலேயே வந்து விட்டேன். வேலை செய்யும் பெண்கள் இந்த ஆவணங்களை பெறுவதற்கு அரசு கொடுத்துள்ள கால அவகாசம் போதுமானதல்ல. மேலும் சில நாட்கள் அவ காசம் வழங்க வேண்டும். இந்த திட்டம் ஏழை, எளிய, நடுத்தர குடும்ப பெண் களுக்கு உதவியாக இருக்கும். தகுதியானவர் களுக்கு எந்த வித இடைத்தரகரும் இல்லாமல் ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்க வேண்டும்.
செண்பகவல்லி (அமைந்தகரை):- நான் டேட்டா என்ட்ரி பணி செய்து வருகிறேன். பூந்தமல்லியில் இருந்து வேலைக்கு செல்கிறேன். தினமும் பஸ்சில் செல்வதால் இப்போது அதற்கான செலவு அதிகரித்து விட்டது. அரசின் ஸ்கூட்டர் மானியம் கிடைத்தால் செலவு குறைவதோடு மற்ற பணிகளை செய்யவும் உதவியாக இருக்கும். அலுவலகத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்லவும், திரும்பி வரவும் முடியும். எனவே எங்களைப்போன்ற வேலை செய்யும் பெண்களுக்கு மானியம் மூலம் ஸ்கூட்டர் வாங்க உதவி செய்தால் நன்றாக இருக்கும்.
தீபிகா (சூளைமேடு):- நான் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருகிறேன். தற்போது பஸ் கட்டணமாக தினமும் 88 ரூபாய் செலவிடுகிறேன். 12 கி.மீ. தூரம் உள்ள அலுவலகத்தக்கு ஸ்கூட்டரில் சென்றால் தினமும் 20 ரூபாய் தான் செலவாகும். பெண்களுக்கு பாதுகாப்பான இந்த திட்டத்தை நான் வரவேற்கிறேன். இதை ஏதோ கண் துடைப்புக்காக செய்து விடக்கூடாது. பெண்கள் அதிக அளவு பயன் பெற வேண்டுமானால் மேலும் சில நாட்கள் விண்ணப்பிக்க அவகாசம் தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #tamilnews