அண்ணாநகர்:
சென்னை முகப்பேர் பகுதியில் கார்களுக்கு காப்பீடு வழங்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தை அதே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர்களான கணவன்- மனைவி இருவரும் நடத்தி வருகிறார்கள். பெண் தொழில் அதிபர் அலுவலகத்துக்கு சென்று நிறுவன பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.
இவரது நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த ரத்தினகுமார் அலுவலக விஷயமாக பெண் தொழில் அதிபருடன் சகஜமாக பேசி பழகி உள்ளார்.
அப்போது பெண் தொழில் அதிபர் தனது அந்தரங்க விஷயங்கள் பற்றியும் ரத்தினகுமாரிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன்பு தனக்கு வேறு ஒரு இளைஞரிடம் காதல் இருந்ததாகவும், பின்னர் அந்த காதல் முறிந்து போனதாகவும் கூறியுள்ளார்.
இப்படி பெண் தொழில் அதிபர் பற்றிய ரகசியங்களை தெரிந்து கொண்ட ரத்தினகுமார் அதனை வைத்து அவரை மிரட்ட தொடங்கினார்.
உங்கள் அந்தரங்க விஷயங்களை கணவரிடம் சொல்லி விடுவேன். இதனால் உங்கள் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். எனவே நான் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்று கூறி ரத்தினகுமார் பெண் தொழில் அதிபரை தொடர்ந்து மிரட்டி இருக்கிறார்.
இதனால் பயந்து போன பெண் தொழில் அதிபர் ரத்தினகுமார் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆபாசமாக படம் எடுத்து தனது செல்போனுக்கு அனுப்புமாறு தொழில் அதிபரிடம் ரத்தினகுமார் கூறினார்.
பெண் தொழில் அதிபரும் மிரட்டலுக்கு பயந்து தன்னை ஆபாசமாக படம் எடுத்து அதனை ரத்தினகுமாரின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார்.
இதுபோன்று கவர்ச்சியான பல படங்களை பெண் தொழில்அதிபர் ரத்தின குமாருக்கு தொடர்ந்து அனுப்பி வைத்துள்ளார். பின்னர் இந்த படங்களை காட்டி ஆசைக்கு இணங்குமாறு ரத்தினகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பெண் தொழில் அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது அடிக்கடி எனக்கு பணம் தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்த ரத்தினகுமார் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார்.
அவரது மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் எல்லை மீறி சென்றதால் வேறு வழியின்றி பெண் தொழில் அதிபர் தனது கணவரிடம் நடந்த விவரங்களை கூறி கண்ணீர் விட்டு கதறி உள்ளார்.
இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ரத்தினகுமார் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினகுமாரை கைது செய்தனர்.
மிரட்டல், செக்ஸ் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் ரத்தினகுமார் பற்றி பல்வேறு தகவல்கள் தெரியவந்தது.
பெண் வேடம் போட்டும் ரத்தினகுமார் பெண்கள் பலரை ஏமாற்றி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரது செல்போனை போலீசார் பரிசோதித்து பார்த்தபோது, அதில் அவர் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்களும், பெண் வேடத்தில் இருக்கும் போட்டோக்களும் இருந்தது.
ரத்தினகுமார் பெண் தொழில் அதிபரை ஏமாற்றியது போல மேலும் பல பெண்களிடமும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பெண்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களிடம் கூட தங்களது அந்தரங்க விஷயங்களை தெரிவிக்கக் கூடாது.
அதுபோன்று தெரிவிக்கும் பட்சத்தில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கி கொள்ள நேரிடும். எனவே பெண்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.