மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் சப்-கலெக்டர் திவ்யா எஸ். அய்யர். 
செய்திகள்

அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை மகிழ்வித்த பெண் சப்-கலெக்டர்

திருவனந்தபுரம் அருங்காட்சியகத்திற்கு ஒருநாள் சுற்றுலாவாக அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் பெண் சப்- கலெக்டர் உற்சாகமாக பொழுதை போக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் மாவட்ட சப்-கலெக்டராக இருப்பவர் திவ்யா எஸ். அய்யர்.

இளம் வயது சப்-கலெக்டரான இவர், அந்த மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது எளிய அணுகுமுறை மூலம் பொதுமக்களின் மனம் கவர்ந்த அரசு அதிகாரியாக திகழ்கிறார். இவர், பொது மக்களை தேடி அரசு நிர்வாகம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களை உடனுக்குடன் சென்று சேரவும் முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் திவ்யா எஸ். அய்யர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களுடன் தனது நேரத்தை செலவிட்டு மகிழ்வித்தார்.

திருவனந்தபுரம் அருங்காட்சியகத்திற்கு ஒருநாள் சுற்றுலாவாக அழைத்து வரப்பட்ட அந்த குழந்தைகளுடன்தான் இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு நடந்தது.

குழந்தைகளோடு குழந்தையாக மாறி அவர்களை மகிழ்விக்க சப்-கலெக்டர் திவ்யா எஸ். அய்யர் பாட்டு பாடினார். அந்த குழந்தைகள் தாங்கள் செய்த காகித பூக்கள், வண்ணத்துப்பூச்சிகளை அவருக்கு பரிசளித்தனர்.

இதுபற்றி திவ்யா எஸ். அய்யர் கூறும்போது, கள்ளம் கபடமற்ற இந்த குழந்தைகளுடன் செலவிட்ட நேரத்தை எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன். கோவிலுக்கு வந்ததுபோன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த குழந்தைகளுக்கு சட்ட ரீதியாக, மருத்துவ ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக என்ன உதவிகள் செய்ய முடியுமோ, அதை மாவட்ட நிர்வாகம் மூலம் செய்வேன் என்றார்.

மேலும் இவர்கள் பெற்றோருக்கு மட்டும் செல்ல குழந்தைகள் அல்ல. சமூகத்திற்கும் பிரியமானவர்கள் என்றும் திவ்யா எஸ். அய்யர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். #Tamilnews

SCROLL FOR NEXT