செய்திகள்

மணப்பாறையில் காய்ச்சலுக்கு பெண் பலி: ஸ்டெச்சர் இல்லாததால் உடலை கைகளில் சுமந்து சென்ற தந்தை - மகன்

மணப்பாறையில் இறந்த பெண்ணின் உடலை கணவன் மற்றும் மகன் ஸ்டெச்சர் இல்லாமல் கையில் தூக்கி ஆம்புலன்சில் ஏற்றிச்சென்ற சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சி ஆழ்த்தியது.

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள அயன் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மதியழகன். கட்டிட தொழிலாளியான இவரது மனைவி சின்னப்பொன்னு (வயது 45). இவர் கடந்த மாதம் 25-ந்தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் சின்னப்பொண்ணு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை எடுத்துச் செல்ல குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்த செவிலியர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது தனியார் ஆம்புலன்சில் உடலை எடுத்துச் செல்லக்கூடாது இலவச ஆம்புலன்சை அழைத்துள்ளோம், வந்ததும் உடலை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி உள்ளனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வரும் என்று இறந்த சின்னப்பொண்ணுவின் கணவன் மதியழகன் மற்றும் அவரது மகன் மற்றும் உறவினர்கள் காத்திருந்தனர். ஆனால் 6 மணி நேரத்திற்கு மேலாகியும் கூட ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரமடைந்த மதியழகன் மற்றும் குடும்பத்தினர் அங்கு பணியில் இருந்த செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் அதைப்பற்றி யாரும் கண்டு கொள்ளாததால் மனவேதனை அடைந்த குடும்பத்தினர் வெளியில் வந்து அமர்ந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் இலவச ஆம்புலன்ஸ் வந்தது.

ஆனால் உடலை எடுத்து ஆம்புலன்சில் ஏற்றி வைக்க யாரும் இல்லை. ஆம்புலன்ஸ் டிரைவர் மட்டுமே இருந்தார். இதையடுத்து இறந்த பெண்ணின் கணவர் மதியழகன் மற்றும் அவரது மகன் ஆகியோர் சின்னப்பொண்ணுவின் உடலை கையில் சுமந்தபடி ஆம்புலன்சுக்கு எடுத்து வந்து வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

இறந்த பெண்ணின் உடலை கணவன் மற்றும் மகன் ஸ்டெச்சர் இல்லாமல் கையில் தூக்கி ஆம்புலன்சில் ஏற்றிச்சென்ற சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சி ஆழ்த்தியது. இதற்கிடையே இறந்த பெண்ணிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

மணப்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நிலை ஏற்கனவே மிகவும் பரிதாபமாக இருந்து வரும் நிலையில் தற்போது இறந்தவர்களின் உடல்களை ஸ்டெச்சர் கூட இல்லாமல் குடும்பத்தினரே சுமந்து செல்லும் சம்பவம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் வேதனையடையச் செய்துள்ளது.

இதுபோன்று சம்பவங்களை தடுத்திட உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறந்த பெண்ணின் குடும்பத்தினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.