திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிகால் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி அருணா (வயது48). கணவன் மனைவி இருவரும் நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்றனர். கிரிவலம் முடித்துவிட்டு நள்ளிரவு 2 மணியளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் செல்வா நகர் செல்லும் வழியில் வந்தபோது எதிரே பைக்கில் வந்த மர்ம நபர்கள்2 பேர் திடீரென வழிமறித்தனர். அவர்கள் அருணா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியர் கத்தி கூச்சலிட்டனர்.
ஆனால் மர்மநபர்கள் மணிவண்ணனையும் அருணாவையும் கீழே தள்ளி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் காயமடைந்த இருவரையும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி சென்ற 2 கொள்ளையர்களையும் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.