சேதராப்பட்டு:
கோட்டக்குப்பம் பழைய பட்டினம் சாலையை சேர்ந்தவர் சரவணன். இவர், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி மோனகா. (வயது 41). இவர், சென்னையில் உள்ள நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோனகாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் வாரம் ஒரு முறை கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுவது வழக்கம்.
அதுபோல் மோனகா நேற்று தனது தந்தையுடன் சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் சிகிச்சை முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். கோட்டக்குப்பம் நெருங்கும் வழியில் மோனகாவின் தந்தைக்கு செல்போன் அழைப்பு வரவே அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென மோனகா மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வேகமாக கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி சென்றார். இதனால் பதறியடித்த அவரது தந்தை செய்வதறியாமல் திகைத்தார்.
பின்னர் மோனகாவை தேடி சென்ற போது, பெரிய முதலியார்சாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மட்டும் அனாதையாக கிடந்தது. மோனகாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் மோனகா இல்லை.
இதையடுத்து அவரது கணவர் சரவணன் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோனகாவை தேடி வருகிறார்கள்.