செய்திகள்

கொடுங்கையூரில் கியாஸ் கசிவால் தீயில் கருகிய பெண் பலி

கொடுங்கையூரில் கியாஸ் கசிவால் தீயில் கருகிய பெண் பலியானார். தந்தை, மகள், மகன் ஆகியோர் 67 சதவீத தீக்காயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பெரம்பூர்:

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 7-வது பிளாக் 175-வது தெருவை சேர்ந்தவர் வெங்கட பிரகாஷ்(55). ரயில்வே ஊழியரான இவர் ஐ.சி.எப்.பில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர் மனைவி கீதா (44), மகள் ‌ஷர்மிளா(24), மகன் கிஷோர் (20) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வெங்கடபிரகாஷ் எழுந்து மின்விளக்கை போடுவதற்காக சுவிட்சை போட்டார். அப்போது வீடு முழுவதும் கியாஸ் கசிந்து பரவி இருந்தது. இதனால் சுவிட்சை போட்டதும் பயங்கர சத்தத்துடன் கியாஸ் வெடித்து சிதறியது. இதில் வீட்டின் பக்கவாட்டு சுவர்கள், இடிந்தன ஜன்னல்களும் தூக்கி வீசப்பட்டன. அப்போது வெங்கடபிரகாசும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கீதா, ‌ஷர்மிளா, கிஷோர் ஆகிய 4 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரும் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் கீதா இன்று அதிகாலை 4 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடபிரகாஷ், அவரது மகள் ‌ஷர்மிளா, மகன் கிஷோர் ஆகியோர் 67 சதவீத தீக்காயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 பேரின் உடல் நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது. உயிருக்கு போராடி வரும் இவர்களை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT