செய்திகள்

பயணியின் நகையை பறித்து தப்பிய பெண்களை மடக்கிப்பிடித்த பெண் கண்டக்டர்

கேரளாவில் பயணியின் நகையை பறித்து தப்பிய 2 பெண்களை பி.டி.உஷா போல் வேகமாக ஓடிச்சென்று பெண் கண்டக்டர் மடக்கி பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் ஆலப்புழா நகரில் இருந்து கோலத்து என்ற இடத்திற்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. இதில் கண்டக்டராக சுஜா இருந்தார். பஸ்சில் பயணிகள் அதிகம் இருந்தனர். பஸ் கந்தகடவு பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது பயணிகள் ஏறினர்.

பஸ் நின்றபோது பஸ்சில் இருந்த சரஸ்வதி என்ற பயணியிடம் 2 இளம்பெண்கள் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். அதிர்ச்சியடைந்த சரஸ்வதி அலறி சத்தம்போட்டார். ஆனால் பஸ்சில் இருந்த ஆண் பயணிகள் உள்பட யாரும் இளம்பெண்களை பிடிக்க முயற்சிக்கவில்லை. அதற்குள் பெண்கள் வெகுதூரம் ஓடினர்.

கூட்டநெரிசல்  காரணமாக சற்று தாமதமாக அறிந்த கண்டக்டர் சுஜா பஸ்சை விட்டு கீழே இறங்கி தேடினார். இளம்பெண்கள் தூரத்தில் ஓடுவது தெரிந்தது. சுஜா, பி.டி. உஷா போல் வேகமாக ஓடிச்சென்று 2 பெண்களையும் மடக்கிப்பிடித்தார். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் ஆலப்புழா போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த கவிதா (28), சரஸ் (29) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 4 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

துணிச்சலாக போராடி பயணியின் நகையை மீட்டு கொடுத்த கண்டக்டர் சுஜாவுக்கு பாராட்டு குவிகிறது. #Tamilnews

SCROLL FOR NEXT