திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குவளக்குடி குடித்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி வேலம்மாள் (வயது 40). இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒருவர் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். மற்றொருவர் வேடசந்தூரில் தங்கி, அங்குள்ள ஒரு பஞ்சு மில்லில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆறுமுகம் பிரிந்து சென்று விட்டார். இதனால் வேலம்மாள், தன்னுடைய கடைசி மகளான மீனாட்சியுடன் (9) வீட்டில் வசித்து வந்தார்.
ஆறுமுகம் பிரிந்து சென்றுவிட்டதால் வீட்டில் பண கஷ்டம் ஏற்பட்டது. இதனால் சில நாட்களாக வேலம்மாள் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை வேலம்மாள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதற்காக, தனது உடலிலும், மகளின் உடலிலும் மின்வயரை சுற்றி விட்டு சுவிட்சை போட்டார்.
இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே வேலம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மின்சாரம் பாய்ந்ததும் தூக்கி வீசப்பட்ட மீனாட்சி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் மின் இணைப்பை துண்டித்து வேலம்மாளின் உடலில் சுற்றியிருந்த மின் வயர்களை அறுத்து எடுத்தனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மீனாட்சிக்கு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.