நாகர்கோவில்:
நாகர்கோவில் கட்டையன் விளை பஞ்சபாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி அகிலா (வயது 40). இவர் கட்டையன்விளை மீன் மார்க்கெட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்துவந்த ஒருவர் அகிலா கழுத்தில் கிடந்த 11 பவுன் செயினை பறித்துவிட்டு தப்பியோடினார்.
இதையடுத்து அகிலா கூச்சலிடவே அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கொள்ளையனை துரத்தினார்கள். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று ஸ்காட் கல்லூரி அருகே வைத்து கொள்ளையனை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் இருந்து 11 பவுன் நகையும் மீட்டனர்.
கொள்ளையன் பிடிபட்டதையடுத்து அந்த பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். கொள்ளையனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். கொள்ளையன் பிடிபட்டது குறித்து நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ் பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பொது மக்கள் பிடியில் இருந்த கொள்ளையனை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கொள்ளையனின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் கொள்ளையனிடம் போலீசார் விசாரித்தபோது புத்தேரி பாறையடியைச் சேர்ந்த பெருமாள் (வயது 54) என்பது தெரியவந்தது.
கொள்ளை நடந்த இடம் வடசேரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டதாகவும் இதையடுத்து நேசமணி நகர் போலீசார் பெருமாளை வடசேரி போலீசில் ஒப்படைத்தனர். நகை பறிப்பு சம்பவம் குறித்து அகிலா வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட பெருமாள் கடந்த வருடங்களாக நாகர்கோவிலில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அந்த ஓட்டல் மூடப்பட்டுள்ளது. அதன் பிறகு வேலையின்றி பெருமாள் சுற்றிவந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பெருமாளை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இதைதொடர்ந்து பெருமாள் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.