திருவனந்தபுரம்:
கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சசீந்திரன்.
கேரள மந்திரிசபையில் சசீந்திரன் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்தார். பதவியில் இருந்தபோது, பெண் ஒருவருடன் செல்போனில் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது. இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியானது.
இதையடுத்து சசீந்திரன் பதவி விலக வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக சசீந்திரன் பதவி விலகினார். இவருக்கு பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த தாமஸ் சாண்டிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.
சமீபத்தில் இவரும், அரசு நிலத்தில் முறைகேடு செய்ததாக புகார் கிளம்பியதை தொடர்ந்து பதவி விலகினார். இதனால் மந்திரி சபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கான இடம் காலியாக இருந்தது.
இந்த நிலையில் சசீந்திரன் மீதான வழக்கை விசாரித்து வந்த திருவனந்தபுரம் முதன்மை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு, வழக்கில் இருந்து சசீந்திரனை விடுவித்தது. இதனால் அவருக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்க வேண்டுமென்று மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
இதனை கட்சியின் மேலிடமும் வலியுறுத்தியது. எனவே சசீந்திரன் மீண்டும் மந்திரியாவார் என கூறப்பட்டது. இன்று மாலை அவர் பதவியேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சசீந்திரன் எம்.எல்.ஏ.வை வழக்கில் இருந்து திருவனந்தபுரம் முதன்மை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு விடுவித்ததை எதிர்த்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மகாலெட்சுமி என்ற பெண், கேரள ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.
சசீந்திரன் வழக்கில் திருவனந்தபுரம் முதன்மை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு அவசர கதியில் தீர்ப்பு கூறி உள்ளதாகவும், எனவே இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரிக்க வேண்டுமென்றும் அப்பீல் மனுவில் கூறி உள்ளார்.
இது சசீந்திரனுக்கு மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மந்திரியாக பதவியேற்பதற்கும் சிக்கலை உருவாக்கி உள்ளது.