செய்திகள்

டெல்லியில், வழிகேட்பது போல் கடத்தி ஓடும் காரில் மர்மநபர்களால் இளம்பெண் பாலியல் பலாத்காரம்

டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் வழிகேட்பது போல் 24 வயது பெண்ணை ஓடும் காரில் கடத்தி மர்மநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி:

டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் 24 வயது பெண் ஒருவர் இரவு பணி முடிந்து நேற்று அதிகாலை வீடு திரும்புவதற்காக டெல்லி கோல்ப் கோர்ஸ் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சொகுசு காரில் வந்த சில இளைஞர்கள் இளம்பெண்ணிடம் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு செல்வதற்கு வழிகேட்டனர்.

அவரும் உதவி செய்யும் நோக்குடன் வழிசொல்லிக் கொண்டிருந்தார். அப்போது காருக்குள் இருந்தவர்கள் திடீரென அவரை இழுத்து உள்ளே ஏற்றினர். கார் விரைந்ததும் அதில் இருந்த மர்மநபர்கள் காருக்கு உள்ளேயே பி.பி.ஓ. பணியாளரை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், அவரை அக்‌ஷர்தாம் கோவில் அருகே கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுபற்றி அந்த இளம்பெண் 39-வது செக்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, டெல்லியில் இரவு பணி முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டு கூறப்பட்டு வரும் நிலையில் ஓடும் காரில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.