செய்திகள்

ராசிபுரம் மாணவிக்கு நீட் தேர்வு எழுத போலி நுழைவுச்சீட்டு வழங்கிய சேவை மைய பெண் நிர்வாகி தலைமறைவு

ராசிபுரம் மாணவிக்கு நீட் தேர்வு எழுத போலி நுழைவுச்சீட்டு வழங்கிய சேவை மைய பெண் நிர்வாகி தலைமறைவாக உள்ளார்.

மாலை மலர்

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் நவரத்தினராஜ். இவரது மகள் ஜீவிதா (வயது 17) நேற்று முன்தினம் ‘நீட்’ தேர்வு எழுத சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள சவுடேஸ்வரி கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு சென்றார்.

தேர்வு மைய அதிகாரிகள் அவரது நுழைவுச்சீட்டை வாங்கி சரிபார்த்தபோது தேர்வு மையத்தின் பெயர் சவுடேஸ்வரி கல்லூரி என்றும், சென்டர் கோடு எண் கேரள மாநிலம் கோட்டயம் என்றும் இருந்தது. நுழைவுச்சீட்டில் காணப்பட்ட இந்த குளறுபடியால் மாணவியை அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

இதனால் அவர் தேர்வு எழுத முடியாமல் தனது டாக்டர் கனவு நிறைவேறாமல் போய்விட்டதே என மனவேதனையுடன் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் ஜீவிதாவின் தந்தை நவரத்தினராஜ் ராசிபுரம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:-

ராசிபுரம் அண்ணாசாலையில் உள்ள தமிழக அரசின் பொது சேவை மையத்தில் கடந்த மாதம் 12-ந் தேதி தேர்வு கட்டணம் ரூ.1,400-ம், கூடுதலாக சேவை கட்டணம் ரூ.200-ம் செலுத்தி நீட் தேர்வு எழுத எனது மகள் விண்ணப்பித்தார். கடந்த 2-ந் தேதி சேலம் சவுடேஸ்வரி கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத என் மகளுக்கு நுழைவுச்சீட்டு வந்திருப்பதாக கூறி அதனை பொது சேவை மையத்தின் பெண் நிர்வாகி கலைச்செல்வி கொடுத்தார்.

பின்னர் 5-ந் தேதி பிற்பகல் எனது செல்போனுக்கு தொடர்புகொண்ட கலைச்செல்வி எனது மகளுக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டு கேரள மாநிலம் கோட்டயத்தில் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.

அவரிடம் இருந்து அந்த நுழைவுச்சீட்டை பெற்று வந்தோம். ஆனால் கேரள மாநிலம் கோட்டயம் செல்ல போதுமான கால அவகாசம் இல்லாததால் நானும், ஜீவிதாவும் சேலம் சவுடேஸ்வரி கல்லூரியில் உள்ள தேர்வு மையத்திற்கு நேற்று முன்தினம் காலையில் சென்று விசாரித்தோம்.

அப்போதுதான் சேவை மைய நிர்வாகி கலைச்செல்வி கொடுத்த நுழைவுச்சீட்டு போலியானது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த நுழைவுச்சீட்டு நீட் தேர்வு நடத்தும் சி.பி.எஸ்.இ. வாரியம் வழங்கியது இல்லை என்றும், கலைச்செல்வி போலியாக நுழைவுச்சீட்டை தயார் செய்து எனது மகளை மோசடி செய்ததும் தெரியவந்தது.

எனவே எனது மகளுக்கு போலியான நுழைவுச்சீட்டு கொடுத்து தேர்வு எழுத முடியாமல் செய்து என் மகளின் கல்வி எதிர்காலத்தை வீணாக்கிய கலைச்செல்வி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் அளிக் கப்பட்ட புகாரையொட்டி கலைச்செல்வி தலைமறைவாகி உள்ளார்.