செய்திகள்

அனுமதி இல்லாமல் செயல்பட்ட 3 தண்ணீர் கேன் கம்பெனிக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை

செங்குன்றம் அருகே அனுமதி இல்லாமல் செயல்பட்ட 3 தண்ணீர் கேன் கம்பெனிகளையும் அதிகாரிகள் அதிரடியாக மூடி சீல் வைத்தனர்.

மாலை மலர்

செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன் தயாரிக்கும் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் பெரும்பாலான கம்பெனிகள் உரிய அனுமதி பெறாமல் செயல்படுவதாக கூறப்படுகிறது. அங்கு ராட்சத மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நிலத்திடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து மக்கள், மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு புகார் மனு அளித்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பொன்னேரி துணை வட்டாட்சியர் சீனிவாசன், சோழவரம் வருவாய் அதிகாரி வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் நல்லூர் ஊராட்சியில் உள்ள தண்ணீர் கேன் தயாரிக்கும் கம்பெனிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது, அண்ணா தெருவில் உள்ள 3 கம்பெனிகள் அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அந்த 3 கம்பெனிகளையும் அதிகாரிகள் அதிரடியாக மூடி சீல் வைத்தனர்.

மேலும் அங்கிருந்த 11 மின் மோட்டார் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, “நல்லூர் ஊராட்சி பகுதியில் உள்ள தண்ணீர் கேன் தயாரிக்கும் அனைத்து கம்பெனிகளிலும் சோதனை நடத்தப்படும். அனுமதி பெறாமல் செயல்படும் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தடி நீரை திருடுவது குற்றம் ஆகும்” என்றார்.