அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் இடையே திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு கோஷ்டியாகவும், துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
டி.டி.வி.தினகரன் கோஷ்டியில் வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன் உள்பட 34 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எடப்பாடி கோஷ்டியில் 89 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடியை, வெற்றிவேல் விமர்சித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
வெற்றிவேலை கண்டித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் கூட்டாக பேட்டியளித்தனர். இந்த நிலையில் ஜெயலலிதா படத்தை அவமானபடுத்தியவர் திருத்தணி அரி என்று வெற்றிவேல் கடுமையாக தாக்கி பேட்டி கொடுத்து இருந்தார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான திருத்தணி அரி எம்.பி. இன்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
கட்டுக்கோப்பாக இருந்த அ.தி.மு.க.வை தினகரன் அணியினர் சீர்குலைக்க செய்து வருகின்றனர். இது நல்லதல்ல. உட்கட்சி விஷயத்தை தெருவில் சந்தி சிரிக்க வைக்கின்றனர்.
புரட்சி தலைவி அம்மா படத்தை நான் அவமானபடுத்தியதாக வெற்றிவேல் கூறுகிறார்.
இதுபற்றி அம்மாவே விளக்கம் அளித்து திருத்தணி அரியை பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று சட்டசபையிலேயே பேசினார்.
சட்டசபையில் ஆற்காடு வீராசாமி சொன்ன கருத்தை துரைமுருகன் சொன்னதாக வெற்றிவேல் பேட்டி கொடுக்கிறார். அவருக்கு யார் என்ன பேசினார்கள் என்று தெரியாமலேயே மனம் போன போக்கில் பேசுகிறார்.
காங்கிரசுக்கு துரோகம் செய்து விட்டு அங்கிருந்து ஓடி வந்தவர் தான் வெற்றிவேல். அவர் அ.தி.மு.க. நிர்வாகிகளை கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது. அவருக்கு நாவடக்கம் தேவை.
நரசிம்மராவ் போல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன் என்று வெற்றிவேல் கேள்வி எழுப்புகிறார். நரசிம்மராவ் மவுனமாக இருந்ததால்தான் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தார்.
எனவே எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருப்பது கட்சி ஒற்றுமைக்கு நல்லது. அவர் மவுனம் கலைத்தால் பல உண்மைகள் வெளிவரும். பல திருப்பங்கள் நடந்து விடும். எனவே வெற்றிவேல் போன்றவர்கள் அமைதி காப்பது தான் கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்லது.