நாகர்கோவில்:
வேலூர் அடுக்கும்பாறை என்ற இடத்தை சேர்ந்தவர் லெட்சுமி, (வயது 30), என்ஜினீயரிங் பட்டதாரி. இவர், நாகர்கோவில் வடசேரி போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
எனக்கு பேஸ் புக் மூலம் நாகர்கோவில் அருகே உள்ள அருமநல்லூர் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் பழக்கமானார். அவரும் என்ஜினீயரிங் பட்டதாரி என்பதால் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இதனால் நாங்கள் பேஸ் புக் மூலம் எங்கள் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டோம்.
நாளடைவில் எங்கள் பழக்கம் காதலாக மாறியது. இதை தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் எனக்கும், அய்யப்பனுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இங்கு கணவர் வீட்டில் நாங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம்.
இந்த நிலையில் எனது கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால், அவர், என்னை வேலூரில் உள்ள தாய் வீட்டில் விட்டு விட்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார். அங்கு நான் மேற்படிப்பு படித்து வந்தேன். இந்த நிலையில் நான், பேஸ் புக் பார்த்தபோது, எனது கணவர் இன்னொரு பெண்ணுடன் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நான், அதுபற்றி விசாரித்தபோது எனக்கு தெரியாமல் எனது கணவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து இங்கு ஒரு பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அந்த பெண்ணுடன் இங்கு குடும்பம் நடத்தும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
இதுபற்றி நான், வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தேன். அதற்கு அவர்கள் சம்பவம் நடந்த இடம் நாகர்கோவில் என்பதால் இந்த வழக்கை நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றினார்கள். மேலும் நானும், நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்வதற்காக நாகர்கோவில் வந்தேன்.
அப்போது என்னை எனது கணவர் அய்யப்பன், அவரது 2-வது மனைவி, உறவினர்கள் அருண்குமார், மணிகண்டன் மற்றும் அய்யப்பனின் தந்தை கிருஷ்ணன் ஆகியோர் என்னை புகார் கொடுக்க விடாமல் தடுத்து மிரட்டினார்கள். மேலும் என்னை சாதியை சொல்லியும், ஆபாசமாக பேசியும் திட்டினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறி உள்ளார்.
இதுபற்றி வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர குமார் ஆகியோர் அய்யப்பன் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.