செய்திகள்

குடிக்க பணம் தராததால் மனைவியை கொன்று கதறி அழுத தொழிலாளி

குடிக்க பணம் தராததால் தலையணையால் மனைவியின் முகத்தை அமுக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

திருப்பூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 43). இவரது மனைவி இந்திராகாந்தி (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கணவன்- மனைவி இருவரும் திருப்பூரில் வாடகை வீட்டில் வசித்தப்படி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். 2 மகன்களும் திருவண்ணாமலையில் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு மதுபோதையில் சேகர் வீட்டுக்கு வந்தார். பின்னர் சிறிதுநேரம் கழித்து அவருக்கு மீண்டும் மது குடிக்க ஆசை வந்தது. இதனால் மனைவி இந்திராகாந்தியிடம் பணம் கேட்டார். அப்போது அவர் பணம் கொடுக்க மறுத்து கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சேகர், திடீரென மனைவியை தாக்கினார். பின்னர் தலையணையால் மனைவியின் முகத்தை அமுக்கினார். இதில் மூச்சு திணறி இந்திரா காந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

மனைவி இறந்ததால் சேகர், வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலை சென்றார். பின்னர் அங்கு விடுதியில் இருந்த 2 மகன்களையும் அழைத்து கொண்டு திருப்பூர் போலீசில் சரண் அடைந்தார். போலீசாரிடம் மனைவி கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சேகர் வீட்டுக்கு வந்து இந்திரா காந்தி உடலை மீட்டனர்.

பின்னர் சேகரை கைது செய்து விசாரித்தனர். இதில் போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

சம்பவத்தன்று போதையில் வீட்டுக்கு வந்தேன். பின்னர் எனக்கு மீண்டும் மது குடிக்க ஆசை வந்தது. இதனால் மனைவியிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் தர மறுத்து என்னை திட்டினார்.

இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தலையணையால் முகத்தை அமுக்கினேன். சிறிது நிமிடத்தில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். மனைவி இறந்ததை நினைத்து வேதனையால் அழுதேன். மனைவியை கொலை செய்து விட்டோ மே என்று கவலைப்பட் டேன். இதனால் விடிய விடிய மனைவி உடல் அருகே உட்கார்ந்து கதறி அழுதேன்.பின்னர் காலையில் திருவண்ணாமலைக்கு சென்று 2 மகன்களையும் அழைத்து வந்து சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கைதான சேகரை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.